கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வலுவான கூட்டணியுடன் தான் நாம் போட்டியிடுவோம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டம் சுமார் 2 மணி நேரம் வரை நடந்தது. இதில், திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் 29 மாவட்ட செயலாளர்கள் பேசினர். அவர்கள் பேசுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்தார்.

தொடர்ந்து இறுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: பொதுமக்கள் தங்களிடம் குறைகளை கூறும்போது மனுக்களாக கொடுக்கும் போது சிரித்த முகத்துடன் மனுக்களை பெற்றுக் கொள்ளுங்கள். பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய பொதுக்கூட்டங்களை மிகவும் சிறப்பாக நடத்துங்கள். பொதுக்கூட்டங்கள் தான் திமுகவினுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளை கைப்பற்றினோம். ஆனால் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற  தேர்தலில் 40க்கு 40 தொகுதியையும் நாம் கைப்பற்ற வேண்டும்.

அதற்கான கட்டமைப்புகளை இப்போது இருந்தே நிர்வாகிகள் துவங்க வேண்டும். தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதில் நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நன்கு பணியாற்றக்கூடிய பூத் ஏஜென்ட்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். வலுவான கூட்டணியுடன் தான் நாம் போட்டியிடுவோம். கூட்டணி பற்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணிகளில் புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக் கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும். சிறப்பாக பணியாற்றுங்கள். அதே சமயம் அரசினுடைய திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை கண்காணியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: