89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் குஜராத்தில் 60% வாக்குப்பதிவு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடந்த 89 தொகுதிகளில் 60 சதவீத வாக்குகள் பதிவானது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அங்கு 1995ம் ஆண்டு முதல் நடக்கிற ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ. வரிந்து கட்டுகிறது. இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு முதல்கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது.  

இதையொட்டி 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அதிகாலையில் இருந்தே ஜனநாயக கடமையாற்றுவதற்காக திரண்டு இருந்தனர். பெண்கள் ஓட்டுபோட அதிக ஆர்வம் காட்டினார்கள். இளம் வாக்காளர்கள் முதன் முதலாக ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஓட்டு போட்டபின் அவர்கள் கையில் வைத்த மையுடன் செல்போனில் செல்பி எடுத்து தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

கிராம புறங்களில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.  பாவ் நகரில் உள்ள பாலிட்டானா பகுதியில் 2 அரசியல் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜாம்ஜோத்பூரில்  வாக்குச் சாவடியில் தங்களுக்கு தனிச் பூத் இல்லாததைக் கண்டு பெண் வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் பட்டேல் தனது மனைவியுடன் நவ்காரி பகுதி வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று காலை ராஜ்கோடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அவருடன் கணவரும், கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா வந்திருந்தார். நேற்று காலை 9 மணி நிலவரப்படி 4.92 சதவீத ஓட்டுகளும், 11 மணி நிலவரப்படி 18.95 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 27,978 தலைமை அதிகாரிகளும்,78, 985 வாக்குப்பதிவு அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

* சிலிண்டருடன் ஓட்டு போட வந்த வேட்பாளர்கள்

அம்ரெலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பரேஷ் தனானி, ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்கோட் தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ் ஜோஷி ஆகியோர் சைக்கிளில் கேஸ் சிலிண்டரை கட்டி எடுத்துச்சென்று வாக்களித்தனர். இதே போல் மூத்த பா.ஜ தலைவரும் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானி, மாநில பா.ஜ தலைவர் சிஆர் பட்டேல், பாஜ மாநிலங்களவை எம்பி பரிமல் நத்வானி ஆகியோர் முன்கூட்டியே வாக்களித்தனர். ஜூனாகத்தில் காஸ் சிலிண்டரை  தோளில் சுமந்து கொண்டு வாக்குச்சாவடியை நோக்கி நடந்து கொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை போலீசார் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

* 93 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது

குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்த 89 தொகுதிகள் தவிர மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கு வரும் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார்கள். 2 கட்ட தேர்தல் முடிந்ததும் டிச.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

* குஜராத்தில் காலையில் ஓட்டு மகாராஷ்டிராவில் மாலையில் திருமணம்

குஜராத் மாநிலம் தாபி வாக்குச்சாவடியில் நேற்று காலையில் பாரம்பரிய திருமண உடையான குர்தா-பைஜாமா அணிந்து பிரபுல்பாய் மோர் என்பவர் வந்தார். அவசர அவசரமாக என்னை ஓட்டு போட விடுங்கள் என்று வாக்குச்சாவடி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். அவரிடம் கேட்ட போது,’ ‘எனக்கு இன்று திருமணம் மகாராஷ்டிராவில் காலையில் நடப்பதாக இருந்தது. ஆனால் தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக நான் மாலையில்மாற்றி வைத்து விட்டேன். எனவே அனைவரையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். ஓட்டு போட்ட பிறகு நான் உடனே மகாராஷ்டிராவுக்குச் செல்ல வேண்டும்’ என்றார்.

Related Stories: