மீன்பிடி பிரச்னையில் ஊரைவிட்டு வெளியேற முயன்ற கிராம மக்கள்: சப்-கலெக்டர் சமரச பேச்சுக்கு பின் கலைந்து சென்றனர்

சென்னை: சுற்றுலாதலமான பழவேற்காடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சில கிராமங்களில் கடலில் மீன்பிடித்தும், மற்ற சில கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கூனங்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கடலில் மீன்பிடிப்பதுடன், வாரத்துக்கு 2 நாட்கள் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடித்து வந்துள்ளனர். இதற்கு ஏரியில் மீன்பிடித்து வரும் கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்பட 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கூனங்குப்பம் மற்றும் பிற மீனவ கிராம மக்களிடையே மோதல் இருந்து வருகிறது.

இதுகுறித்து, பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, நேற்று காலை முதல் கூனங்குப்பம் மீனவ கிராமத்தில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில், மீன்பிடி வலையுடன் வீட்டைவிட்டு வெளியேறினர். மேலும், தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை ஆவணங்களையும் திருவள்ளூர் கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, நடைபயணமாக புறப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், ஊரை விட்டு வெளியேறி வரும் கூனங்குப்பம் மீனவ கிராம மக்களிடையே பொன்னேரி போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், தங்களின் மீன்பிடி பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்காததால், கலெக்டரை சந்தித்து ஆவணங்களை வழங்கப் போவதாக தெரிவித்தனர்.  அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி வஞ்சுவாக்கத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்தனர். அங்கு சப்-கலெக்டர் ஐஸ்வரியா ராமநாதன், ஏடிஎஸ்பி யேசுராஜன் தலைமையில் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சமரசம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 8 காலை மணி முதல்  11  வரை நீடித்த இந்த பரபரப்பு நீங்கியது.

Related Stories: