சுனாமியில் இறந்ததாக கருதப்பட்டவர் காவல் கரங்கள் மூலம் மீட்டு குடும்பத்துடன் சேர்த்து வைப்பு

சென்னை: சுனாமியில் இறந்து விட்டதாக குடும்பத்தினரால் காரியம் செய்யப்பட்ட நபர் காவல் கரங்கள் மூலம் மீட்டு குடும்பத்துடன் நேற்று சேர்த்து வைக்கப்பட்டார். கடந்த அக்டோபர் 10ம் தேதியன்று 55 வயது மதிக்கத்தக்க நபர் ஆதரவின்றி தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான ஜிஆர்டி கடையின் பின்புறம் உள்ள ஏரிகரையில் பழைய பொருட்கள் மற்றும் குப்பைகளை சேர்த்து அதை சுமந்து கொண்டு சுற்றிதிரிவதாக காவல் கரங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் கரங்கள் மூலம் கருணை உள்ளங்கள் அறக்கட்டளை தன்னார்வலர்கள் சம்மந்தப்பட்ட நபரை மீட்டு, பாதுகாப்பாக அன்பகம் மனநல காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்தனர்.

அவரிடம் காவல் கரங்கள் மூலம் விசாரணை செய்ததில் கோவில்பட்டியை சேர்ந்த டேவிட் துரைராஜா என்பது தெரியவந்தது. அவரது பெயர், புகைப்படத்தை  கோவில்பட்டி கிழக்கு கிராமபுற காவல்நிலையத்திற்கு அனுப்பி விசாரணை செய்யப்பட்டது. அதில் கோவில்பட்டி, பத்திரகாளியம்மன் கோவில், வேலாயுதபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் தான் டேவிட் துரைராஜ் என்பது தெரியவந்தது. மனைவி 25 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்ட நிலையில் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக காணாமல் போனது, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் தெரிந்தன.

இந்நிலையில், கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அவர் இறந்து விட்டதாக அவருக்கு காரியம் செய்ததாகவும், அவரது மகன் கூறியுள்ளார். இதையடுத்து அவர் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட விவரத்தை குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அதன்படி டேவிட்டின் மாமா ராமச்சந்திரன் அழைத்து செல்ல நேற்று சென்னைக்கு வந்த நிலையில் சென்னை, கூடுதல் ஆணையர் லோகநாதன் முன்னிலையில் அவரது மாமா ராமச்சந்தின் என்பவருடன் மீட்கப்பட்ட டேவிட் துரைராஜை அனுப்பி வைத்தனர். அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: