பூந்தமல்லி- போரூரில் மெட்ரோ ரயில் பணியால் பாதுகாப்பான பயணம் செல்ல பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பூந்தமல்லி : பூந்தமல்லி போரூர் முதல் பூந்தமல்லி வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணியால் பாதுகாப்பான பயணம் செல்வது குறித்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், 4வது வழித்தடத்திற்காக போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

இதை தடுக்கும் விதமாக, மெட்ரோ ரயில் திட்ட நிர்வாகம், மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏஇஓஎன் கேஇசி நிறுவனங்கள், போரூர் போக்குவரத்து போலீசார் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நடமாடும் வாகனம் மூலம் விழிப்புணர்வு அறிவிப்புகள் ஒலிபரப்பப்படுகிறது. அந்த அறிவிப்பில் பயணத்தை முன்கூட்டியே தொடங்கவும், மெதுவாக செல்லவும், பாதுகாப்பாக சேரவும், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று அறிவித்தபடி அந்த வாகனம் செல்கிறது.

போரூர் ஏரி அருகே விழிப்புணர்வு வாகனத்தை மெட்ரோ ரயில் கேஇசி திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழநி ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த வாகனம் போரூர் முதல் பூந்தமல்லி வரை அறிவிப்புகளை வெளியிட்டபடி சென்று வரும். மேலும் போரூர், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் சிக்னல்களிலும் அறிவிப்புகள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து, வாகனங்களில் வந்தவர்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும், வாகனங்களில் வந்தவர்களிடம் விழிப்புணர்வு ஸ்டிக்கரில் பாதுகாப்பான பயணம் குறித்து கையெழுத்து வாங்கி அவர்களது வாகனங்களில் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து, போக்குவரத்து விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினர். இந் நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கேஇசி திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி, திட்ட மேலாளர் மோகன், தனியார் நிறுவன பாதுகாப்பு மேலாளர் பாலதிவாகர், பொறியாளர் வெங்கடசாமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், பாதுகாப்பு மேலாளர் தங்கராஜ், நிர்வாக மேலாளர் கிருஷ்ணசாமி மற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: