போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளுக்கு இடையே ரூ.180 கோடியில் சுழற்சாலை மேம்பாலம்: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு

சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளுக்கு இடையே ரூ.180 கோடியில் சுழற்சாலை மேம்பாலம் அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னையில் அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள்,  கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் (ஓஎம்ஆர்) இருக்கின்றன.  இந்த பகுதிகளில் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், இந்த இரு சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் போக்குவரத்தில் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரண்டு சாலைகளையும் இணைத்து சுழற்சாலை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக அரசு ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்து, சுழற்சாலை மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒக்கியம், துரைப்பாக்கம், கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்திற்கும் இடையில் சுழற்சாலை மேம்பாலம் கட்ட எல் அண்ட் டி நிறுவனம் திட்ட அறிக்கை தயார் செய்ய உள்ளது.

இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரு சாலைகளையும் இணைப்பதற்கான கட்டுமானத்தை கடந்த ஆண்டு சுமார் ரூ.204 கோடியில்  நெடுஞ்சாலை துறை தொடங்கியது. இரு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நீலாங்கரை சாலையை நேரிடையாக துரைப்பாக்கத்துடன் இணைக்க 1.45 கி.மீ தூரம் சாலை கட்டுமானம் முடிக்கப்பட்டது.

முன்பு இருந்த இணைப்புச் சாலைகளில் இசிஆர்  வழியாக செல்லும் வாகனங்கள் திருவான்மியூர் வழியாக ஓஎம்ஆர் அடைய லட்டிஸ் பாலம் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு சாலைகளையும் இணைக்க கத்திப்பாரா போன்று சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: