ரூ.64 ஆயிரம் கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம்; 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்துள்ளது திமுக அரசு: தேனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தேனி: தமிழகத்தில் 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை ஓராண்டில் செய்துள்ளது திமுக அரசு என்று தேனியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தேனி அன்னஞ்சி பிரிவு பைபாஸ் ரோட்டில் தனியார் மில் அருகே இன்று காலை 10 மணிக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பல கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு ரூ.300 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தேனி மாவட்டம் கலைஞரால் கடந்த 1996ல் துவக்கி வைக்கப்பட்டது. இங்குள்ள அரசு தோட்டக்கலைக் கல்லூரி 1989ல் துவக்கப்பட்டது. கடந்த 2001ல் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம், 1999ல் தேனி உழவர்சந்தை, பெரியகுளம் அருகே ரூ.32 கோடி செலவில் 50 கிராமங்கள் பயன்படும் சோத்துப்பாறை அணை திட்டம் ஆகியவற்றை கலைஞர்தான் நிறைவேற்றினார். உத்தமபாளையம், தேவாரம் பகுதி விவசாய மக்களின் நீண்ட கால கோரிக்கையான பிடிஆர் மற்றும் 18ம் கால்வாய் திட்டம் போன்றவற்றையும் கலைஞரே துவக்கினார்.

தேனியில் புதிய பஸ் ஸ்டாண்ட் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்து, ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, துணை முதல்வராக நான் இருந்தபோதுதான் அடிக்கல் நாட்டப்பட்டது. சின்னமனூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை என பல்வேறு திட்டங்கள், எணண முடியாத சாதனைகளை திமுக ஆட்சிதான் செய்தது.

இன்றைய விழாவில், சாலை விபத்து நிவாரண நிதி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நலிந்தோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, இணைய வழி இ-பட்டா, பெரியார் நினைவு சமத்துவபுரம் பராமரிப்பு உதவித்தொகை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஆட்டு கொட்டகை அமைக்க உதவித்தொகை, நமக்கு நாமே திட்டம், எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை,

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் சுழல்நிதி, ஆடுகள் வளர்க்க நிதி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதியுதவி, திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், புதிய மின்னணு அட்டை, இஸ்லாமிய, கிறிஸ்தவ மகளிருக்கு சங்க நிதி, முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கு ஸ்கூட்டர், சுய வேலைவாய்ப்பு திட்டம், கலைமன்ற விருதுகள், கல்வி உதவித்தொகை, பயிர்க்கடன்கள் இப்படி பல்வேறு தலைப்புகளில் பல்வேறு உதவிகள் ரூ.71.04 கோடி மதிப்பில், 10 ஆயிரத்து 427 பேருக்கு வழங்கியுள்ளோம். இதுதான் நல்லாட்சியின் இலக்கணம், இதுதான் மக்களுக்கான அரசு. இதுதான் திராவிட மாடல் அரசு.

ஒவ்வொரு தனி மனித தேவையையும் பூர்த்தி செய்வதே அரசின் இலக்கு. ஓராண்டு ஆட்சி 7ம் தேதி நிறைவடைய இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. 5 வருடம், 10 வருடம் ஒரு ஆட்சியில் இருந்தால் என்ன செய்வோமோ அதனை ஓராண்டில் இந்த திமுக அரசு செய்துள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள், பொங்கல் பரிசாக 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டன, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3ம் குறைக்கப்பட்டது.

நெசவாளர்களுக்கு பஞ்சுக்கு ஒரு சதவீதம் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கூட்டுறவில் 14 லட்சம் பேருக்கான நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் முழுமையும் தள்ளுபடி செய்துள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம், விபத்தில் சிக்குவோர் காக்க இன்னுயிர் காப்போம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 மாதத்தில் ரூ.64 ஆயிரம் கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளோம். உங்கள் தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கோயில் நிலங்கள் 2,567 ஏக்கருக்கு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மகளிர் உயர்கல்வி திட்டத்தில் கீழ் மாதம் 6 லட்சம் மாணவியர் பயன்பட உள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் கூறியதில் பெரும்பான்மையானவை நிறைவேற்றப்பட்டு விட்டன. 5 முதல் பத்து சதவீதம் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அதனையும் படிப்படியாக நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றித் தருவோம். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் கலந்து கொள்ளும் முன்பு, தேனி க.விலக்கு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள பொதுமக்களிடமும் விசாரித்தார்.

‘‘நாகரீகமில்லாதவர்கள்’’

விழாவில் முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘கலைஞர் ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றார். எனக்கு உழைப்பை கற்றுத் தந்தவர் கலைஞர். மகனாக எனக்கு அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கும் பாக்கியம் கிடைத்தது. இன்றைக்கு இருப்பவர்கள் கருணாநிதி என்று உச்சரிக்கின்றனர். கருணாநிதி என்று பெயர் சொன்னதால் ஆத்திரப்பட்டு, எனக்கே தலைவர் கலைஞர்தான். அவர் பெயரைச் சொல்லலாமா எனக்கூறி, அப்படி கூறியவரை காரிலிருந்து இறக்கியவர்தான் எம்ஜிஆர். அந்த நாகரீகத்தை இன்றிருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான்’’ என்றார்.

Related Stories: