தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

சென்னை : தமிழகத்தில் 1000 புதிய அரசு பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடுசெய்யவும், காற்று மாசுப்பாட்டை குறைக்கும் பிஎஸ்-6 ரக பேருந்துகளை பயன்படுத்தும் வகையிலும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 1000 பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மண்டலத்திற்கு 180 பேருந்துகள், சேலம் மண்டலத்திற்கு 100 பேருந்துகள், கோவை மண்டலத்திற்கு 120 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அதேபோல, கும்பகோணம் மண்டலத்திற்கு 250 பேருந்துகள், மதுரைக்கு 220 பேருந்துகள் மற்றும் நெல்லை மண்டலத்திற்கு 130 பேருந்துகள் புதிதாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   

Related Stories: