இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்த திமுக மூத்த உறுப்பினர் வீட்டிற்கு சென்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

சேலம்: இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்து உயிர்நீத்த திமுக மூத்த உறுப்பினர் தங்கவேல் குடும்பத்திற்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆறுதல் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தாழையூர் கிராமத்தில் திமுக மூத்த உறுப்பினர் தங்கவேலு கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ குளித்து உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு சென்ற கே.என்.நேரு தங்கவேலுவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தங்கவேல் மனைவி ஜானகியிடம் கொடுத்தார். அப்போது, தங்கவேல் மறைவுக்கு முதலமைச்சர் தமது இரங்கலை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த திமுக மூத்த உறுப்பினரின் குடும்பத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார். அமைச்சருடன் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். 

Related Stories: