கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளன்று திறப்பு?: அமைச்சர் முத்துசாமி சூசக தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் நவீன பேருந்து நிலையத்தில் மூன்றாவது முறையாக ஆய்வு நடந்தது. முதல்வரின் பிறந்தநாளன்று திறக்கப்படலாம் என  எதிர்பாக்கப்படுகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளாம்பாக்கம் பகுதியில் 110 ஏக்கர் கொண்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதை கையகப்படுத்திய சிஎம்டிஏ நிர்வாகம் ரூ.393.74 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையத்தை கடந்த 2019ம் ஆண்டு முதல் கட்டி வருகிறது. தற்போது 90% பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதால் வருகிற பொங்கல் தினத்தன்று நவீன பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதற்காக, கடந்த 2 முறை அமைச்சர்கள் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில், மூன்றாவது முறையாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று மாலை திடீரென வந்தார். பின்னர், கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 225 அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தலாம். பேருந்து நிலையம் எதிரே புதிதாக ரயில் நிலையம் அமைக்கவும் கூடுதல் தண்டவாளம் அமைக்கவும், நடைமேடை மற்றும் மேம்பாலம் அமைக்கவும், அதுமட்டுமல்லாமல் டவுன் பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய வசதிகள் செய்தும், பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 6 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதையும் ஏற்பாடு செய்யும்படி சிஎம்டிஏ நிர்வாகத்தினரிடம் சொல்லி இருக்கிறோம். மேலும், இந்த பேருந்து நிலையம் முழு வீச்சில் முடிக்கப்பட்டு மிக விரைவில் பொங்கல் பண்டிகை தினத்தன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், மேலோட்டமாக பார்க்கப்போனால் பொங்கல் பண்டிகைக்குள் கட்டிட பணிகள் முடிவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. முதல்வரின் பிறந்தநாளான வருகிற மார்ச் 3ம் தேதி திறக்கப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது என்று சூசகமாக கூறினார்.

Related Stories: