திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு பாவு நூல் வினியோகம் நிறுத்தம் துவங்கியது: 5 லட்சம் பேர் வேலை இழப்பு

பல்லடம்:  திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்களுக்கு நேற்று முதல் பாவு, நூல் விநியோகம் செய்வதை ஜவுளி உற்பத்தியாளர்கள் நிறுத்தினர். சீரற்ற பஞ்சு விலை காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை இழந்து கொண்டிருக்கின்றனர். நிலையற்ற நூல் விலை காரணமாக துணியின் விலையை நிர்ணயம் செய்ய முடியாத காரணத்தினால் துணி வர்த்தகம் நடைபெறாமல் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பல கோடி மதிப்புள்ள துணி தேக்கமடைந்துள்ளது.

மேலும் தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் மற்றும் போட்டி சந்தை மாநிலங்களை விட உயர்வாக உள்ள காரணத்தினால் துணி விலை அடக்கம் உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த துணிகளை வாங்க வர்த்தகர்கள் யாரும் முன் வரவில்லை. எனவே நேற்று முதல் இரண்டு வாரத்துக்கு முற்றிலுமாக விசைத்தறியாளர்களுக்கு பாவு, நூல் விநியோகத்தை நிறுத்தி ஜவுளி உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இதனால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பாவு நூல் விநியோகம் நிறுத்தம் செய்வதின் மூலம் இரண்டு வாரத்தில் மொத்தம் ரூ.1400 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: