கொற்கை, சிவகளை தொல்லியல் களத்தை சிந்து சமவெளி ஆய்வாளர் பார்வை

ஏரல்: கொற்கை மற்றும் சிவகளையில் நடைபெற்ற அகழாய்வு பணிகளை சிந்து  சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட  கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல்  அருகே உள்ள கொற்கை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனின்  தலைநகரமாகவும், புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாகவும் விளங்கி உள்ளது.  இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்துள்ளது. அரபு  குதிரையை இறக்குமதி செய்தும், இங்கு விளையும் முத்துக்கள், வாசனை, மூலிகை பொருட்கள் உள்பட பல பொருட்கள் ஏற்றுமதியும் நடந்துள்ளது.

பெரியபுருஸ், தாலமி போன்றோர்  இத்துறைமுகத்தை போற்றி புகழ்ந்துள்ளனர். இந்த கொற்கை துறைமுகத்தை கால்டுவெல் ஆய்வு செய்து உலகிற்கு தெரிவித்தார். மேலை நாட்டு  அறிஞர்கள் இங்கு கிடைத்த காசுகளை திருநெல்வேலி காசு என்ற தலைப்பில்  நூலாகவும் வெளியிட்டுள்ளனர். கொற்கையை தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி  1966-67ல் ஆய்வு செய்தார். கடந்தாண்டு மாநில அகழாய்வு  இயக்குநர் தங்கத்துரை தலைமையில் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் கொண்ட குழுவினர்  ஆய்வு செய்தனர். தற்போது இதன் ஆய்வறிக்கை தயார் செய்ய இங்கு கிடைத்த  பொருட்கள் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு  வருகிறது.

கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு  தமிழக தொல்லியல் துறை சார்பில் கடல்சார் ஆய்வு தொடங்கப்படும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல்சார் ஆய்வு  மேற்கொள்வதற்கு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை  தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். இதனிடையே சிந்து சமவெளி ஆய்வாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலகிருஷ்ணன் கொற்கையை பார்வையிட்டார்.

கொற்கை சுற்றுலா விளக்க  கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள கடந்தாண்டு அகழாய்வு பணியில் கிடைத்த  பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து அருகிலுள்ள 2500 ஆண்டுகள் பழமையான  வன்னிமரம், செழியநங்கை கோயில் என்றழைக்கப்படும் கண்ணகி கோயில், கொற்கை  குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் துணை இயக்குநர்  காளீஸ்வரன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தனர்.  தொடர்ந்து அவர், அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை  பார்வையிட்டு அதுகுறித்து கோயில் பூசாரியிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், ஏரல் தாசில்தார் கண்ணன்,  ஆறுமுகமங்கலம் ஆர்ஐ முத்து சரவணன், கொற்கை விஏஓ காளிராஜ், சமூகசேவகர்  காமராஜ் காந்தி, பெருமாள் பட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ்  ஆகியோர் சிவகளை தொல்லியல் களத்தை பார்வையிட்டனர். அங்கு அகழாய்வு  இணை இயக்குநர் விக்டர் ஞானராஜ் வரவேற்று விளக்கம் அளித்தார்.

அங்கு  கிடைத்த பொருட்கள் பற்றியும், அதன் கார்பன்டேட் அறிதல் குறித்தும்,  சிவகளையில் சைட் மியூசியம் அமைவது குறித்தும் தொல்லியில்  அலுவலர்களுடன் விவாதித்தார். இந்நிகழ்ச்சியில்  ஆணையாளர் சுரேஷ், கூடுதல் ஆணையாளர் அன்றோ, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், சிவகளை  பஞ்சாயத்து தலைவர் பிரதிபா மதிவாணன், துணைத் தலைவர் கைலாசம், கவுன்சிலர்  பிச்சையா, விஏஓ சதீஷ்குமார், பஞ். செயலர் வெங்கடேஷ், விவசாய சங்கம்  தலைவர் மதிவாணன், கிராம உதவியாளர் மபிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*ஆதிச்சநல்லூரிலும் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு செய்து வந்தனர். இந்த அகழாய்வு முடிந்து அந்த இடத்திலேய உள்ளது உள்ளபடியே பொருட்களை காட்சிப்படுத்தும் பணிக்காக ஒன்றிய அரசின் ஆணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிந்து சமவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்த பகுதிகளை பார்வையிட்டார். இங்கு கிடைத்த தங்கம் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்த குழி உள்பட பல குழிகளையும், ஆதிச்சநல்லூரில் பி சைட் எனப்படும் இடத்தையும் பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் அருண், மணிகண்டன் ஆகியோர் விளக்கமளித்தனர். தொடர்ந்து அங்குள்ள மலையரசி அம்மன் கோயில் மற்றும் தாமிரபரணி ஆற்றுப்பகுதியையும் பார்வையிட்டார்.

Related Stories: