மறுகட்டுமான திட்டத்தில் 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைதொகை வழங்கப்படுகிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமான திட்டத்தில் கட்டப்பட உள்ள 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னையில் ஆன்டிமானிய தோட்டம், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை, கருமாங்குளம், காமராஜ் காலனி, லலிதாபுரம் ஆகிய திட்டப்பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும்,  நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு படிப்படியாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். தற்போது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், எம்எல்ஏக்கள் த.வேலு, நா.எழிலன், ஜெ.கருணாநிதி, வாரிய செயலாளர் துர்கா மூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சுந்தர மூர்த்தி, வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: