சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமனம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியத்தை நியமித்து கே.எஸ்.அழகிரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் 14 பேர் வெற்றி பெற்றனர். ஒரு கவுன்சிலர், அதாவது காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த நாஞ்சில் பிரசாத் கடந்த வாரம் உடல்குறைவு காரணமாக காலமானார். இதை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 13 ஆக உள்ளது.  இருந்த போதிலும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக இழுபறி நிலை நீடித்து வந்தது. மற்ற கட்சிகளின் சார்பில் ஏற்கனவே தலைவர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த பதவியை குறிவைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சி மேலிடத்தை கவுன்சிலர்கள் அணுகி வந்தனர். குறிப்பாக, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தங்களை தேர்வு செய்யுமாறு கட்சி தலைமையை அணுகி வந்தனர். அதே நேரத்தில் கட்சியினரும் அந்த பதவியை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது. அதில் எடுத்த முடிவுகள் டெல்லி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டெல்லி மேலிடம் ஒப்புதலுடன் மேலிட பொறுப்பாளர் குண்டூராவ் தலைமை பரிந்துரைத்தவரை உடனடியாக தேர்வு செய்யும்படி மாநில தலைமையை அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘சென்னை மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்படுகிறார். திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக பி.கோவிந்தராஜன் நியமனம் செய்யப்படுகிறார்\” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.திரவியம் 6வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் தற்போது வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கிய நாளில் இருந்து சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் யாத்திரை பயணம் தொடர்பாக தெருமுனை பிரசார கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரமான பணியாற்றதால் இந்த பதவி வழங்கப்பட்டதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. எம்.எஸ்.திரவியத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: