பஸ்சில் பயணியிடம் செல்போன் திருடிவிட்டு ஓட்டம் குற்றவாளியை விரட்டி பிடித்த கர்ப்பிணி காவலருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சுசீலா என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 24ம் ேததி பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து காவல் நிலையம் செல்ல 48பி மாநகர பேருந்தில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் பயணி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் செல்போனை பறித்துக்கொண்டு பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். இதை கவனித்த பெண் காவலர் சுசீலா செல்போனை பறித்து சென்ற குற்றவாளியை விடாமல் துரத்தி சென்று பிடித்தார். அவரிடம் இருந்து செல்போனை மீட்டு பயணியிடம் ஒப்படைத்தார். பிறகு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பயணி அளித்த புகாரின்படி பிடிபட்ட குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், திருவிக நகரை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் ஜாபர் ஷெரீப் (36) என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு, செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் ஜாபர் ஷெரீப்பை கைது செய்தனர். மூன்று மாத கர்ப்பிணியான பெண் காவலர், தனது உடல் நிலையை பொருட்படுத்தாமல் குற்றவாளியை பிடித்தார். இதுகுறித்து தமிழக டிஜிபி கவனத்துக்கு தெரியவந்தது. உடனே டிஜிபி சைலேந்திரபாபு கர்ப்பிணி பெண் காவலர் சுசீலாவை நேற்று அலுவலகத்துக்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories: