மாடியில் இருந்து விழுந்து 8 இடங்களில் முறிவு முதுகுதண்டு அறுவை சிகிச்சையால் இயல்பு நிலைக்கு திரும்பிய சிறுமி

* வாணியம்பாடி அரசு டாக்டர் அசத்தல்

* கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்

ஆம்பூர் :  வாணியம்பாடி அருகே மாடியில் இருந்து விழுந்ததில் முதுகுதண்டு எலும்பு முறிவு பிரச்னையால் அவதிப்பட்டு வந்த மாணவியை உரிய அறுவை சிகிச்சை அளித்து குணமாக்கிய அரசு டாக்டரை அவரது பெற்றோர் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காபட்டை சேர்ந்தவர் செல்வா. இவர் ஓவிய கலைகூடம் நடத்தி வருகிறார். இவரது மகளான ஓவியா என்பவர் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் வீட்டின் மாடியில் காய வைத்திருந்த துணிகளை எடுக்க ஓவியா சென்றார்.

அப்போது எதிர்பாராவிதமாக தவறி விழுந்ததில் அவருக்கு முதுகுதண்டில் 8 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓவியாவிற்கு அதே மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவரான டேவிட் என்பவர் உரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அந்த மாணவிக்கு உரிய மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை அளித்து தீவிரமாக கண்காணித்தார்.

இந்நிலையில் மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மிக விரைவாக மாணவி மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் நேற்று மாணவி தனது சக தோழிகளுடன் இயல்பான நிலையில் ஓடியாடி விளையாடி மகிழ்வதை கண்ட ஓவியாவின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர், தனது மகளுடன் டாக்டர் டேவிட்டை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: