மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு 2002 கல்வியாண்டில் வைத்த அரியரை டிசம்பரில் எழுதலாம்: அண்ணாபல்கலை அறிவிப்பு

சென்னை: 2001-02ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலை கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பி.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2001-2002ம் கல்வியாண்டில் (3-வது பருவம் முதல்) படித்தவர்கள் மற்றும் 2002-2003ம் கல்வியாண்டில் சேர்ந்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரியர் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த மாணவர்கள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பருவத்தேர்வில் பங்கேற்க அனுமதி தரப்படுகிறது.

இந்த தேர்வுக்கு சிறப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும். இதுதவிர அந்தந்த பாடத்துக்கான தேர்வு கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்தியாக வேண்டும். அரியர் மாணவர்கள் சிறப்பு தேர்வுக்கு https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் டிச.3ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை லயோலா கல்லூரி, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லுாரி, ஆரணி பல்கலைக்கழக கல்லூரி உட்பட 9 மையங்களில் தேர்வு நடைபெறும். இதில் ஏதாவது ஒரு தேர்வு மையத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: