பேரக்ஸ் சாலையில் திடீர் பள்ளம், புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம்; சீரமைப்பு பணி தீவிரம்

பெரம்பூர்: புளியந்தோப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், அங்கு தடுப்புகளை வைத்து அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வதை தடுத்தனர். பின்னர், இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி பொறியாளர் வைதேகி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, கழிவுநீர் குழாய் உடைந்ததால் ராட்சத பள்ளம் ஏற்பட்டதாகவும், மழைக்காலத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுத்து தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 2 முறை இந்த பகுதியில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளத்தில் 15 நாட்கள் வரை இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் மேலும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால், அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் புரசைவாக்கம் மற்றும் வேப்பேரியிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டவுட்டன் சந்திப்பில் இருந்து நாராயண குரு சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் அஷ்டபுஜம் சாலை சந்திப்பிலிருந்து வெங்கடேச பக்தன் தெரு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து புளியந்தோப்பு பகுதியை நோக்கி செல்ல கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் அஷ்டபுஜம் சாலை சந்திப்பில் இருந்து அஷ்டபுஜம் சாலை மற்றும் அங்காளம்மன் கோயில் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது, என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories: