பாதுகாப்பான குடிநீர் வழங்கல்; 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.          

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவமழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னை குடிநீர் வாரியத்தால் தினந்தோறும் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம், நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 12 லட்சம் குடியிருப்புகளுக்கு இதுவரை, 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமலிருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், உரிய இடைவேளையில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம். மேலும் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், ட்ரம்கள், மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

Related Stories: