முகநூல் மூலம் பழகி ரூ.பல லட்சம் மோசடி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: முகநூல் மூலம் பழகி பல லட்சம் மோசடி செய்த வழக்கை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கிரிதரன் என்பவர், ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினார்.

இதன்படி எனது ஓய்வூதிய பணம் மற்றும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரின் பணம் ரூ.14.35 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். இதன்பிறகு அவரது செல்போன் எண், முகநூல் கணக்கு முடக்கப்பட்டது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தேன். என் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகாரை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குரூப் விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரர் புகாரின் மீது பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விசாரித்தார். தற்போது மனுதாரர் சைபர் க்ரைம் போலீசில் ஆஜராகுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு அல்லது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய திருச்சி எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை உரிய பிரிவினர் விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: