மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு குற்றவாளி ஏ.கே-47 துப்பாக்கி தயாரிக்க முயற்சி; விசாரணையில் தகவல்

பெங்களூரு: மங்களூரு மாநகரில் நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்தில்  முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷாரிக், ஏ.கே47 துப்பாக்கி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில்  தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 19ம் தேதி மாலை ஆட்டோவில்  குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் நாளுக்கு நாள்  புது வடிவம் பெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக  இருக்கும் முகமது ஷாரிக்கின் செல்போன் மாநில போலீசாரின் கையில் கிடைத்தது.  அதில் ஹிஜாப் பிரச்னைக்கு பின், மங்களூருவை இலக்காக வைத்து ஷாரிக்  செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 8 மாதங்களில் சர்வதேச அளவில்  இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா உள்பட பல தீவிரவாத அமைப்புகளுடன் 189 முறை  தொடர்பு கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் அதிகமாக  பயன்படுத்தி வரும் ஏ.கே-47 ரக துப்பாக்கியை இணையதள வசதியுடன் தயாரிக்க முயற்சி மேற்கொண்டதுடன், அதற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர்  செய்து வரவழைத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிக் ரிசர்ச் கவுன்சில் (ஏஆர்எப்) அமைப்புடன்  நெருங்கிய தொடர்பில் இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில்  ஷாரிக்கிடம் சொந்தமாக பைக் உள்ளிட்ட வாகனம் இல்லை. ஆப் மூலம் இயங்கும்  ஓலா, உபர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகம் பயன்படுத்தி உள்ளார். மேலும்  ஓஎல்எக்ஸ் மூலம் பழைய மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வாங்கி இருப்பதும்  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும் மைசூருவில் தங்கி இருந்த  போது, பெட்டி கடை ஒன்றில் ஒரே சமயத்தில் 100 தீப்பெட்டிகள் வாங்கி உள்ளார்.  இவ்வளவு தீ பெட்டி எதற்கு என்று கடைக்காரர்கள் கேட்டபோது, பிள்ளைகள்  பிராஜக்ட் செய்வதற்கு என்று கூறியிருப்பதும் போலீஸ் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

Related Stories: