திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுகிறார்

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது 45வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, இன்று காலை தனது தந்தையும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெறுகிறார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். மேலும் அவர் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். பிறகு, திமுக இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகத்திற்கு சென்று தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துகளை பெறுகிறார்.

அவருக்கு திமுக முன்னணியினர், தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக ஒரு மாதம் கொண்டாட திமுக இளைஞர் அணி மற்றும் திமுகவில் உள்ள அனைத்து அணிகளும் திட்டமிட்டுள்ளனர். இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றோர் மையங்களில் காலை, மதியம், இரவு உணவு வழங்கப்பட உள்ளது. விளையாட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இல்லந்தோறும் சென்று உறுப்பினர் சேர்த்தல் பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதேபோல, மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: