தவறுசெய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன்பு காப்பாற்ற மாட்டோம்: தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உறுதி

சென்னை: ஓய்வு பெறக்கூடிய  காவல்துறை அதிகாரிகளில், நீதிமன்றங்களுக்கும், அரசு குற்றவியல்  வழக்கறிஞர்களுக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உதவிய காவல்துறை  அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி அரசு தலைமை  குற்றவியல் வழக்கறிஞர் மூலம் நடத்தப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற  அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் ஓய்வு பெற  உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு வழியனுப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அசன் முகமது ஜின்னா  பேசும்போது, வழக்குகள் விசாரணையின்போது குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு  மிகச்சிறந்த முறையில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உதவியுள்ளார். குற்றவியல்  வழக்கறிஞர்கள் என்பவர்கள், காவல்துறை தரப்பு மற்றும் குற்றவாளி தரப்பு என  நீதிமன்றத்தின் முன்பு அனைவருக்கும் பொதுவானவர்கள். தவறு செய்யும்  காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நாங்கள் காப்பாற்ற மாட்டோம்.

அதே  வேளையில் நேர்மையான அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார். நிகழ்ச்சியில்  முன்னிலைவகித்த டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, கோவை  குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்தியவர், குடியரசு தலைவர்  விருது பெற்றவர் தாமரைக்கண்ணன். வீரப்பன் தேடுதல் வேட்டையில்  மிகப்பெரிய அளவில் அவர் உதவினார் என்றார். கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன்  பேசும்போது, காவல்துறையினருக்கு நீதிமன்றங்களின் முக்கியத்துவம்  தெரிவதில்லை. வழக்குப்பதிவு செய்தாலே பணி முடிந்தவிட்டதாக கருதுகிறார்கள்.  கடந்த ஒன்றை ஆண்டுகளாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரோடு ஒருங்கிணைந்த  செயல்பட்டு, வழக்கு விசாரணைகளில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டேன்  என்றார். நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: