மாஜி ராணுவ பொறியாளரின் மனைவி ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.40 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் எஸ்பி ஆபிசில் புகார் மனு

ஊட்டி: ஏலச்சீட்டு  நடத்தி ரூ.1.40 கோடி மோசடி செய்த முன்னாள் ராணுவ பொறியாளரின் மனைவி மீது எஸ்பி ஆபீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர்  அருகே வெலிங்டன் கூர்கா கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று ஊட்டியில் உள்ள எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  தொடர்ந்து, அவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.  அதில் கூறியிருப்பதாவது: கேத்தி ஊராட்சி மொக்கட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் ராணுவத்தில் பொறியியல்  பிரிவில் வேலை பார்த்து வந்தார். அவர், அங்குள்ள குடியிருப்பில்  குடும்பத்துடன் வசித்து வந்தார்.

குமாரின் மனைவி தனலட்சமி, ரூ.50 ஆயிரம்,  ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். சுமார்  120 பேர் இந்த ஏலச்சீட்டில் சேர்ந்து மாதம் தோறும் பணம் கட்டி வந்தோம்.  குமார் ஓய்வு பெற்ற பின், அவர்கள் சிங்கார தோப்பு பகுதிக்கு சென்று  விட்டனர். இருப்பினும், நாங்கள் மாதம் தோறும் அவர்களது மகள், மகன் ஆகியோருக்கு கூகுள் பே மூலம் பணம்  செலுத்தி வந்தோம். இதுவரை அவர்கள் 120 பேரிடம் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை  வசூலித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் பணம் செலுத்த சென்ற போது, அவர்கள்  சிங்கார தோப்பில் இல்லை. கோவையில் உள்ள மகளின் வீட்டிற்கு  சென்றுவிட்டதாக தெரிவித்தனர். அவர்களை தொடர்பு கொண்ட போது, தனலட்சுமி கீழே  விழுந்து கோமா நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக தெரிவித்தனர்.

அதன்பின், அவர்கள் மீது வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில்,  கடந்த செப்டம்பர் 2ம் தேதி காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது,  தாங்கள் வசூலித்த ஏலச்சீட்டு பணத்தில் பாதி தொகையை ஒரு மாதத்திற்குள்ளும்,  மீதமுள்ள தொகையை இரு மாதத்திற்குள்ளும் தருவதாக ஒப்புக்கொண்டனர்.  தனலட்சுமியின் கணவர் குமார் மற்றும் அவரது மகன் சுரேஷ் பணத்தை திருப்பித்  தருவதாக கையொப்பமிட்டனர். ஆனால், இதுவரை எங்களுக்கு பணம் தரவில்லை. எனவே,  அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: