கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி பொங்கலுக்குள் முடியுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி பொங்கலுக்குள் முடிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக முடங்கி கிடந்த கன்னியாகுமரியில், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை உப்பு காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசுவது வழக்கம்.

இதற்காக சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும். இந்தநிலையில் ரூ.1 கோடியில் கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. நவம்பர் 2ம் தேதிக்குள் பணியை முடிக்க திட்டமிட்டு, சிலையை சுற்றிலும் இரும்பு சாரம் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். உப்புத்தன்மையை அகற்றுவதற்காக சிலை முழுவதும் காகிதகூழ் ஒட்டும் பணி தொடங்க இருந்த நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்தது. கடல் காற்றும் அதிகமாக இருந்தது. இதனால் பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டது. சுமார் 65 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரமாக மழை  இல்லை. பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தற்போது திருவள்ளுவர் சிலையில் காகித கூழ் ஒட்டும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. சிலையின் மீது ஒட்டப்பட்டு எடுக்கப்படும் காகித கூழை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். அதனை தொடர்ந்து ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும். காகித கூழ் ஒட்டும் பணி 3 வாரத்தில் முடிவடையும். அதன் பின்னர் ஜனவரியில் ரசாயன கலவை பூசும் பணி தொடங்கும்.

பொங்கலுக்குள் பணிகளை முடிக்கும் வகையில் தீவிரமாக பணி நடந்து வருகிறது என சுற்றுலா அதிகாரிகள் கூறினர். பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருகிறது. அந்த நாட்களில் கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். எனவே அவர்கள் திருவள்ளுவர் சிலையை காணும் வகையில் பராமரிப்பு பணியை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.

Related Stories: