₹7 கோடி செலவில் ஏ.வி.எம். கால்வாய் தூர்வாரப்படும்

▪ஆக்ரமிப்புகள் அகற்ற ஒத்துழைக்க வேண்டும் ▪மீனவர் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல்

நாகர்கோவில் :  நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப். கலெக்டர் கவுசிக், மற்றும் மீன்வள அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் கோரிக்கை மனுகளை அளித்தனர். அதனை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:  மீனவ பிரதிநிதி அலெக்ஸ்சாண்டர்:  குமரி மாவட்டத்தில் நாட்டு படகுகள்,  விசைப்படகுகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று  இருந்த நிலையில் தற்போது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் முறையாக  நடத்த வேண்டும்.

ஜூன், ஜூலை மாதங்களில் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள்  பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும், டிசம்பர், ஜனவரி மாதங்களில்  சின்னமுட்டம் முதல் பெரியகாடு வரை உள்ள மீனவர்கள்பதிவை புதுப்பித்துக் கொள்ளும்  வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். கோவளம், மணக்குடி, பெரியகாடு, கீழமணக்குடி ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவுப்  பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள்  பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த பணியை தொடங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

கலெக்டர்: தூண்டில் விளை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.  ஜார்ஜ் ஆன்டனி: ஏவிஎம் கால்வாயில் குளச்சல் முதல் மண்டைக்காடு வரை ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.

கலெக்டர்: ஏவிஎம் கால்வாய் தூர்வருவதற்கு ரூ.4.8 கோடி மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குளச்சலில் ஆக்ரமிப்புகள் அதிக அளவு உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு வருடத்தில் 1000க்கும் மேற்பட்ட ஆக்ரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. குளச்சல் பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற அங்குள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆக்ரமிப்புகள் அகற்ற  உடனே நோட்டீஸ் விநியோகம் செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

ஜாண் அலோசியஸ்:  ஏவிஎம் கால்வாய் இரயுமன்துறையில் இருந்து நீரோடி வரை உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றும்போது, தேங்காப்பட்டணம் துறை முகத்தில் உள்ள படகுகள், மீன்பிடி உபகரணங்கள் கொண்டு வருவதற்கு வசதியாக இருக்கும். உலக மீனவர் தினத்தன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடவேண்டும்.

கலெக்டர்: ₹2.40 கோடியில் தூர்வாருவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆக்ரமிப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனல்ராஜ்: சைமன்காலனி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ₹130 ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியம் குறைவு என்பதால் தூய்மை பணியாளர்கள் யாரும் வருவது இல்லை. இதனால் சைமன்காலனி ஊராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. சம்பளம் உயர்வாக வழங்கினால், தூய்மை பணியாளர்கள் அதிகம்பேர் வருவார்கள்.

கலெக்டர்: சம்பளம் அரசின் உத்தரவு படி வழங்கப்படுகிறது. சைமன்காலனி ஊராட்சி பகுதியில் அதிகமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனை பேரூராட்சியாக தரம் உயர்த்தும்போது, தேவையான நிதி கிடைக்கும்.

பெர்லின்: கன்னியாகுமரியில் குமரி மாவட்ட வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கலெக்டர்: கன்னியாகுமரிக்கு வரும் வெளி மாவட்டம், வெளி மாநில வாகனங்களுக்கும், குமரி மாவட்டத்தில் உள்ள வாடகை வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்யவேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள ஓன்போர்டு கார்களுக்கு நுழைவுகட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இது தொடர்பாக கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும்.

பிரான்சிஸ்: குளச்சல் துறைமுகத்தில் குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும்.

குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து குளச்சல் துறைமுகத்திற்கு செல்லும் சாலையில் இருப்புறமும் ஆக்ரமிப்பு உள்ளது. இதனால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. ஆக்ரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்தி தரவேண்டும். குளச்சலில் இருந்து இரவு 10.30 மணிக்கு குறும்பனை வழியாக திருவனந்தபுரத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும்.

 கலெக்டர்: குளச்சல் துறைமுகத்தில் குடிநீர் இணைப்பு வசதி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளச்சல் பஸ் நிலையம் முதல் துறைமுகத்தில் செல்லும் பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை குளச்சல் நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். மேலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரம்: குமரி மாவட்டத்தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் நாய் கடிக்கு ஆளாகியுள்ளனர். தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: இது தொடர்பாக நீங்கள் எழுத்து பூர்வமாக மனு தாருங்கள், கால்நடை துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

குமரியில் அரசு மீன்வளக்கல்லூரி

பெர்லின்: ஒன்றிய அரசு கடலோர மண்டல  ஒழுங்குமுறை சட்டத்தை திருத்தும் வகையில் வரைவு மண்டல மேலாண்மை அறிக்கையை  வெளியிட்டுள்ளது. இதில் பல மீனவ கிராமங்கள், குடியிருப்புகள் இல்லை. இது  தொடர்பாக கருத்து கேட்பு நவம்பர் 21ம் தேதிக்குள் முடித்து இருக்கவேண்டும்  என கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதால் பல தகவல்கள்  தெரியாமல் உள்ளது. இதனால் தமிழில் அறிக்கை போடுவதுடன், கருத்து கேட்பு  நாளும் நீட்டிக்க வேண்டும்.குமரி மாவட்டத்தில் அரசு மீன்வளக்கல்லூரி  அமைக்கவேண்டும். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை சாலைக்கு  ஜேபியார் பெயர் வைக்க வேண்டும்.

 கலெக்டர்:  தமிழில் அறிக்கை வெளியிடுமாறு நீதிமன்றத்தில் ஒரு அமைப்பு வழக்கு  தொடர்ந்துள்ளது. இதனால் இந்த கருத்து கேட்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 30 நாட்கள் அவகாசம் கொடுத்து கருத்து கேட்பு  கூட்டம் நடத்தப்படும்.  மீன்வளக்கல்லூரி அமைப்பது தொடர்பாக கருத்துரு  அரசுக்கு அனுப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் மீன்வளக்கல்லூரி  அமைக்கப்படும். சாலைக்கு பெயர் வைப்பது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: