மதுரை கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி விவகாரம் துறைமுகம் காவல்நிலைய பெண் காவலர் கைதாகிறார்: மோசடி மன்னனின் பினாமியாக இருப்பதும் அம்பலம்

சென்னை: ரூ.200 கோடி கடன் வாங்கி தருவதாக மதுரை கல்லூரி தாளாளரிடம் ரூ.5.46 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோசடி மன்னன் முத்துவேலுவின் பினாமியாகவும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துறைமுகம் காவல் நிலைய பெண் காவலர் அஜ்மோலை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் மதுரையில் சேது பொறியியல் கல்லூரி நடத்தி வரும் தாளாளர் முகமது ஜலீல் ஒரு புகார் அளித்தார். அதில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பைனான்சியர் பி.எம்.ரெட்டி (எ) முத்துகிருஷ்ணன் (எ) முத்துவேல் என்பவர் அறிமுகமானார். அப்போது, மதுரையில் உள்ள சேது பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக ரூ.200 கோடி பணம் தேவைப்பட்டது. உடனே, பைனான்சியர் முத்துவேல் கல்லூரி விரிவாக்கத்திற்கான முழு பணத்தையும் நான் கடன் வாங்கி தருகிறேன். இதற்காக மொத்த பணத்தில் 2 விழுக்காடு கமிஷன் தர வேண்டும். அதுவும் முன்பே தரவேண்டும் என்று கூறினார்.

எப்படியும் நமக்கு பணம் கிடைத்துவிடும் என்று 2 விழுக்காடு பணம் ரூ.5.46 கோடியை கொடுத்தேன். ஆனால், பணம் பெற்ற முத்துவேல் அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சந்தித்து பணம் குறித்து கேட்டபோது, முறையாக பதில் அளிக்காமல்  நண் பர்களை வைத்து மிரட்டுகிறார். எனவே என்னிடம் வாங்கிய ரூ.5.46 கோடியை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.எம்.ரெட்டி (எ) முத்துகிருஷ்ணன் (எ) முத்து (எ) லையன் முத்துவேல் என்பவர், தன்னை பெரிய பைனான்சியர் போல் கல்வி நிறுவனம் நடத்தி வரும் கல்லூரி தாளாளர் முகமது ஜலீலிடம் ரூ.200 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.5.46 கோடி பணம் கமிஷன் பெற்று மோசடி செய்ததும் உறுதியானது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகளான சங்கர் (34), இசக்கியேல் ராஜன் (37) என 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துவேல் அணிந்து இருந்த 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது, இந்த வழக்கில் முத்துவேல் சிறையில் உள்ளார். அதேநேரம் இந்த மோசடியில் ஈடுபட்ட முத்துவேல் சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சொத்துகள் குறித்து சிறையில் உள்ள முத்துவேலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. முத்துவேல், சென்னை மாநகர காவல்துறையில் துறைமுக காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அஜ்மோல் என்பவருடன் நெருங்கிய தொடர்பிலும் பினாமியாகவும் இருந்து வந்ததும், முத்துவேல் மோசடியாக சம்பாதித்த சொத்துகளை பெண் காவலர் அஜ்மோல் பெயரில் எழுதி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதற்கான வலுவான ஆதாரங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி உள்ளது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதைதொடர்ந்து அதிரடியாக துறைமுகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் அஜ்ேமாலை இரண்டு நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பின்னர் மோசடி மன்னன் முத்துவேல் மற்றும் பெண் காவலர் அஜ்மோலுக்கு உள்ள தொடர்புகள் உறுதியானதால் ஓரிரு நாளில் பெண் காவலர் அஜ்மோலை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அவர் தலைமறைவாவதை தடுக்க ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: