நாளை இந்திய அரசியலமைப்பு தினம் பிடிஓ அலுவலகங்கள், கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தல்; ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு

வேலூர்: இந்திய அரசியலமைப்பு தினமான நாளை அனைத்து பிடிஓ அலுவலகங்கள், கிராம ஊராட்சிகளில் அரசியலமைப்பு உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் தாரேஸ்அகமது உத்தரவிட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கர் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணயசபையால் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை இந்திய அரசியலமைப்பு தினம் நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் ெகாண்டாடப்படுகிறது.

பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில் நாளை காலை 11 மணியளவில் அனைத்து வட்டார  வளர்ச்சி அலுவலகங்கள், கிராம ஊராட்சி மன்றங்களில் ஊரக வளர்ச்சி துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையை படித்து உறுதி மொழி ஏற்க வேண்டும். அத்துடன் இந்திய பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தால், இதற்காக அரசியலமைப்பின் முகவுரை நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 23 மொழிகளில் வாசிப்பது தொடர்பாக https://readpreamble.nic.in இணைய முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற இணையவழி வினாடி வினா தொடர்பாக https://constitutionqqquiz.nic.in என்ற இணைய முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை //IndiaAT75.nic என்ற இணைய முகப்பில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் ஆணையர் தாரேஸ்அகமது உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: