விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்-நகராட்சி நிர்வாகம் அதிரடி

விழுப்புரம் : விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.விழுப்புரம் நேருஜி வீதியில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல் ஷேர் ஆட்டோக்களும் பேருந்துநிலையத்திற்குள் சென்று இயங்கி வருகின்றன. இதனிடையே பேருந்து நிலையத்தில் வெளிப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டிருந்தன.

பயன்பாட்டிற்குவரும்வரை தற்காலிகமாக பேருந்து நிலையத்திற்குள் நடைபாதை கடைகள் வைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. தற்போது இந்த புதிய வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் இந்த நடைபாதை கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனை தானாக முன்வந்து அகற்றுமாறு அறிவுறுத்தியும் அகற்றப்படவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினருடன் சென்று பத்துக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை அகற்றினர். மேலும் பேருந்துநிலையத்தில் பயணிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு பேருந்துகள் நிற்கும் இடம், பயணிகள் ஓய்வெடுக்குமிடம், ஆட்டோ நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் குறித்தும், மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

Related Stories: