புதிய தொழில்நுட்பங்களை கற்பிப்பதில் ஆர்வம் டிஜிட்டல் கல்வியில் கலக்கும் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

*புதுமைகளை புகுத்தும் பள்ளி கல்வித்துறை

*டெலக்ராமில் 55,000 ஆசிரியர்கள் பங்கேற்பு

வலங்கைமான் : தமிழக அரசு கல்வித்துறையில் புதிய, புதிய மாற்றங்களை நாள்தோறும் அறிமுகப்படுத்தி கல்வி துறையை நவீனமயமாக்கி வருகிறது. அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களால் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு புதிய பயிற்சிகளை ஆர்வத்தோடு பங்கேற்று வருகின்றனர்.20 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்தித்தாள்களை பார்த்து தான் கல்வி சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தது.

ஆனால் செல்போன் வந்த பிறகு நவீனம் என்பது கல்வித்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கியது. வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் கல்வியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை உணர்ந்த தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வித் துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. கல்வித்துறையின் மாணவர் சேர்க்கை முதல் அனைத்து விதமான செயல்பாடுகளையும் மின்னணு முறையில் மாற்றி உள்ளது. எமிஸ் என்ற இணையதளம் கல்வித்துறையின் அனைத்து தகவலையும் உள்ளடக்கிய மிகப்பெரிய தகவல் தளமாக மாறி உள்ளது. ஆசிரியர்கள் வருகை பதிவேடு, மாணவர்கள் மதிப்பெண் பட்டியல், பள்ளி பராமரிப்பு, மானியம் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளி செயல்பாடுகளையும் ஆன்லைன் வழியாக மாற்றப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹைடெக் கணினி ஆய்வகங்கள் வழியாக பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நிர்வாகப்பணிகளோடு கல்வி சார்ந்த பணிகளையும் தமிழக கல்வித்துறை ஆன்லைனில் முழுமையாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை ஒன்றிணைத்து வாட்ஸ்அப் மட்டும் டெலிகிராம் குழுவில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஆசிரியர்களுடைய தனி திறமைகள் பகிரப்பட்டு வருகிறது.

மாநில அளவில் டெலிகிராமில் உருவாக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் குழுவில் கிட்டத்தட்ட 55,000 ஆசிரியர்கள் பங்கேற்று தினந்தோறும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவேற்றி தங்களுடைய திறமையை வெளிக்கொணந்து வருகின்றனர். இத்திட்டம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆடல், பாடல், கதை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை அதில் ஆர்வத்தோடு ஈடுபடுத்திக்கொண்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.

டெலிகிராம் குழுவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கற்றல் கற்பித்தல் வீடியோக்கள் பகிரப்படுகிறது.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு ஆதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகள் என 88பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் 4440 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த குறித்து அரசு பள்ளி ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது:

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளை தரம் வாய்ந்த பள்ளிகளாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால் அரசு பள்ளிகள் தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று வருகிறது. அரசு எல்லா பள்ளிகளிலும் கழிவறை மேம்பாடு முதல் வகுப்பறை கட்டமைப்பு வரை எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியையும் தரம் வாய்ந்த பயிற்சிகளாக மாற்றி அவர்களுடைய தரத்தையும் மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்கள் மின்னணு முறையில் திக்ஷா செயலியில் கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தால் செல்போனிலேயே பார்க்கும் வசதியை பள்ளி கல்வித்துறை பரவலாக எல்லா வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தி விட்டது.

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி அரசு பள்ளிகளில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கும் அடிப்படையான ஆங்கில பயிற்சியை வழங்க அதற்கான பயிற்சிகள் அடுத்த வாரங்களில் தொடங்குகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பல்வேறு வகையான ஆசிரியர்கள் தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதனை பள்ளிகளில் ஒரு திருவிழா போல கொண்டாடுகின்றனர். தங்களுடைய கற்பனை திறனையும் கல்வித் திறனையும் அதில் காட்டி அதில் மாணவர்களையும் முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் போன்ற சூழ்நிலை அத்திட்டத்தில் இருப்பதால் மாணவர்கள் தங்கள் கல்வியை இனிமையோடு கற்று வருகின்றனர்.

கல்வித்திருவிழா என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கலைத்திறனை வளர்க்கும் நோக்கில் போட்டிகளை நடத்த அறிவுறுத்துள்ளது இது போன்ற திட்டங்கள் மாணவருடைய அறிவுத்திறனை மட்டுமல்லாது கலைத்திறனையும் கற்பனை திறனையும் வளக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் கலாச்சார பண்பாடுகளில் சிறந்து விளங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது. தொடக்கக் கல்வி என்பது தமிழக மாணவர்களுக்கு அடிப்படையான அமைப்பாக இருப்பதால் அதில் கூடியதால் கவனம் செலுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

தமிழக அரசின் இந்த டிஜிட்டல் மாற்றங்களால் தனியார் பள்ளிகளை காட்டிலும் தமிழக அரசின் தொடக்கப்பள்ளிகள் மிக சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது வரும் காலங்களில் அரசு பள்ளிகள் மற்ற தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெரும் நோக்கில் தமிழக தொடக்கக்கல்வித்துறை புதிய புதிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கி கல்வித்துறை மேம்படுத்தி வருவதைக் கல்வியாளர்கள் பாராட்டு வருகின்றனர்.

Related Stories: