சாதிச்சான்றிழ் வழங்காததை கண்டித்து பழங்குடியின மாணவர்கள் 2ம் நாளாக பள்ளி புறக்கணிப்பு

ஊட்டி :  ஊட்டி அருகே சாதி சான்று வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மலைவேடர் இன பழங்குடியின மாணவர்கள் 2வது நாளாக பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஊட்டி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்குபட்ட தட்டனெரி, பன்னிமரா கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவேடர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 3 தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்து வரும் இவர்களுக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் வரை இந்து மலைவேடர் என்ற பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்கபட்டு வந்தது. இதனால், ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைந்து வந்தனர். மேலும், பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டம் பெற்றும் கூட வேலை வாய்ப்பு கிடைக்காமல் கூலி வேலை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாதிச் சான்றிதழ் இல்லாததால் அரசு வேலை மற்றும் அரசு சலுகைகள்கூட பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு போட்டி தேர்வுகளை எழுத முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களது குழந்தைகள் கல்வி கற்றும் எந்த பலனும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று 2வது நாளாக தட்டனெரி மற்றும் பன்னிமரா ஆகிய கிராம மக்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பாமல் வீடுகளிலையே வைத்துள்ளனர். அந்த மாணவர்களும் சீருடை அணிந்து தட்டேனேரி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: