திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு-முதன்மைச் செயலாளர் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து, அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட கண்காணிப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப்சிங், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரான தமிழக அரசின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடப்பு நிதி ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் விவரம் குறித்து, துறைவாரியாக ஆய்வு செய்தார்.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்த திட்டப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்க வேண்டும், பயனாளிகள் தேர்வில் வெளிப்படையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், ஊரக வளர்ச்சித்துறைகளில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளை அதிகாரிகள் முன்கூட்டியே நேரில் பார்வையிட்டு தடுப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் எனும் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், அண்ணா நகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கில் ஆய்வு நடத்தினார். அடி அண்ணாமலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தையும், மெய்யூர் கிராமத்தில் மிளகு சாகுபடியையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், கீழ்பென்னாத்தூர் பகுதியில் மாணவர் விடுதிகளை அவர் பார்வையிட்டார்.

Related Stories: