தர்மபுரி மாவட்டத்தில் வேலைக்காக இடம்பெயர்வதை தடுக்க சிறுதொழில் தொடங்க மானியமாக ₹4.24 கோடி ஒதுக்கீடு

*பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிப்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கிராமங்களில் இருந்து  வேலைக்காக நகரங்களை நோக்கி இடம் பெயர்வதை தடுக்க, சிறுதொழில் தொடங்க அரசு மானியம் வழங்க ₹4.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் பெரிய அளவில் தொழில்கள் இல்லை. விவசாயத்தை சார்ந்த தொழில்களே உள்ளன. போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால், அண்டை மாநிலங்களிலும், வெளிமாவட்டங்களுக்கும் வேலை தேடிச்செல்லும் நிலை இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வேலைக்காக கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு இடம்பெயர்வதை தடுக்க, தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் கடகத்தூரில் சிட்கோ அமைந்துள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகள் மூலம், ஆயிரகணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மேலும், தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ளன. தீப்பெட்டி, பிவிசி பைப், மிட்டாய் கம்பெனி, கரும்பு வெல்லம், பனியன் தயாரிப்பு, கிரானைட் மற்றும் கிரானைட் பாலிஷ் தொழில்கள், கயிறு, மாம்பழ ஜூஸ் என பல்வேறு சிறு தொழில்கள் மூலம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. சிறு தொழில்களை ஊக்கப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களும், கடன் உதவிகளும் அளித்து வருகின்றன. இதற்காக பயிற்சி மற்றும் கடனுதவியும் வழங்கப்படுகிறது.

 இந்நிலையில் நேற்று, தர்மபுரியில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி நடந்தது. சென்னை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் சுரேஷ் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் வின்ஸ்டன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் கார்த்திகேயன், கனரா வங்கி உதவி பொது மேலாளர் ஆனந்த், தர்மபுரி இயக்குனர் புவனேஸ்வரி, கனரா வங்கி கிளை மேலாளர் இமானுவேல் தினகரன், தர்மபுரி வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை இயக்குனர் விஜயானந்த் மற்றும் பயிற்சியாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறு, குறு தொழில்கள் தொடங்க என்ன தகுதி, கடன் வசதி, அரசு மானியம், பயிற்சி குறித்து, வீடியோ பதிவுகளை காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சென்னை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் சுரேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், கடந்த 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து வேலைக்காக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க, கிராமங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடங்க வழிகாட்டி பயிற்சி மற்றும் கடனுதவி, அரசு மானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டது. சிறு,குறு, நடுத்தர தொழில்கள் தொடங்க அரசு மானியம் வழங்க ₹2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் இதுவரை 48 ஆயிரம் சிறு,குறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

பனைவெல்லம் தயாரித்தல், தேனி வளர்ப்பு, லாரி, பஸ் பாடி கட்டுதல், ஹாலோ பிரிக்ஸ் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு, கார்மென்ட்ஸ், பர்னிச்சர் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், பயோ காஸ் தயாரித்தல் உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்கள் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டில், சிறுதொழில்கள் தொடங்க ₹444 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் ₹164 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,972 சிறு தொழில்கள் தொடங்கப்பட்டு, 47 ஆயிரத்து 776 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. நடப்பாண்டு இதுவரை ₹174 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், நகரங்களுக்கு இடம்பெயர்வதை தடுக்க கிராமப்புறத்தில் கோழிப்பண்ணை, மாட்டு பண்ணை, தேனி வளர்த்தல், கார்மென்ட்ஸ், பியூட்டி பார்லர் உள்ளிட்ட சிறுதொழில்கள் தொடங்க, கடந்த 2021 -2022ம் ஆண்டு ₹4.62 கோடி அரசு மானியம் வழங்கியுள்ளது. நடப்பாண்டிற்கு ₹4.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 464 பேர் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: