சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில பயிற்சிக்கு முக்கியத்துவம்: கல்வித்துறை அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகள் ஏழை, எளிய  மாணவர்களின் கல்வித்தேவையைப் பூர்த்திசெய்து வருகிறது. இங்கு சென்னை மாநகராட்சி பள்ளியின் பங்கானது மிக முக்கியமாகும். கல்வியையும் தாண்டி மாணவர்களை தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவழைப்பது என்பது மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் அனுபவமே.

ஒரு காலத்தில் இடை நிற்றல் என்பது அதிகமாக காணப்பட்டாலும் தற்போது அது வெகுவாக குறைந்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அந்தளவுக்கு மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரமாக வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிக்கு  முக்கியத்துவம் அளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களால் ஆங்கிலம் பேச  முடிவதில்லை என்கிற குறை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்த குறையை போக்க  ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6ம்  வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட   மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவிக்கையில், ‘‘தற்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை கொண்டு வரும். அதுமட்டுமின்றி மாநில வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆங்கிலத்தின் மீதான அச்சம் படிப்படியாக நீங்கும்.

வாரந்தோறும் புதன்கிழமை அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் 2 நிமிடங்கள் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதற்காக மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் அல்லது செய்தி தாள்களிலோ  இருந்து சில தகவல்களை எடுத்து தயார்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார். சென்னை மாநகராட்சி (கல்வி) துணை ஆணையர் சினேகா கூறுகையில், ‘‘ஏற்கனவே 20 சென்னை பள்ளிகளில் ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடையே ஆங்கிலம் பேசும் திறனை வளர்ப்பதால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உலகத்தின் எப்பகுதிக்கு சென்றாலும் எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக பல பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பேசுவதில் ஒவ்வொரு மாணவருக்கும் இருக்கக்கூடிய சிக்கலை  கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டுமென  ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது’’ என்றார்.

Related Stories: