செல்போனில் வாக்குவாதம்-ஆபாச பேச்சு பாஜ விசாரணை கமிட்டி முன் டெய்சி, திருச்சி சூர்யா ஆஜர்: பரஸ்பரம் மன்னிப்பு கேட்டதாக பேட்டி

திருப்பூர்: செல்போனில் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜ விசாரணை கமிட்டி முன்பு நிர்வாகிகள் டெய்சி, திருச்சி சூர்யா சிவா ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்போனில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆபாசமான பேச்சும் இடம் பெற்றிருந்தது. இந்த வாக்குவாதம்  மற்றும் ஆபாச பேச்சு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

அதன்படி, விசாரணை நடத்த விசாரணை குழு அமைக்கப்பட்டது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜ அலுவலகத்தில் நேற்று விசாரணை நடந்தது. மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் விசாரணை அலுவலர்களாக செயல்பட்டனர். குழுவின் முன்பு, டெய்சி மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் நேற்று காலை தனித்தனியாக ஆஜராகினர். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை, கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என விசாரணை குழுவினர் கூறினர். மேலும், இது உட்கட்சி விவகாரம் என்பதால், மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றனர்.

விசாரணை குழுவில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்த பாஜ  சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி அளித்த பேட்டியில், சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோவால் பாஜவில் இவ்வாறு  நடக்கிறதா என பலரும் விமர்சனம் செய்தனர். கட்சியில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய சித்தாந்தத்தை கொண்ட கட்சி பாஜ. பெண் நிர்வாகிகளை அக்காள், அம்மா என அழைக்கும் கட்சி. ஏதோ ஒரு அசம்பாவித சம்பவம் நடந்ததால், எதிர்க்கட்சி உள்பட  பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட எங்கள் இருவரையும் கட்சி பெரியவர்கள் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேச வைத்தனர். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி, மன்னிப்பு கேட்டு, இந்த பிரச்னையை முடித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். இதில், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. ஏதோ திருஷ்டி கண் பட்டதுபோல் இச்சம்பவம் நடந்துவிட்டது. நாங்கள் இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ஒற்றுமையுடன் மீண்டும் கட்சி பணியில் தொடர்ந்து பயணிக்க  உள்ளோம். இவ்வாறு டெய்சி கூறினார்.

திருச்சி சூர்யா பேட்டி: பாஜ ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர்  திருச்சி சூர்யா அளித்த பேட்டியில், இந்த பிரச்னைக்கு முன்பு இருவரும் அக்காள், தம்பி என்ற வகையில்தான் பணியாற்றி வந்தோம். திடீரென ஒரு  அசம்பாவிதம் நடந்துவிட்டது. கட்சிக்கும், மாநில தலைமைக்கும் கட்டுப்பட்டு விளக்கம் கொடுத்துள்ளோம். இருவரும் சுமுகமாக செல்ல முடிவு செய்துள்ளோம். ஆபாசமாக பேசியது தவறுதான். இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். இதற்கு மேல்  கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன்  என்றார்.

* கட்சி பொறுப்பில் இருந்து மட்டும் திருச்சி சூர்யா சஸ்பெண்ட்

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: நடந்தவற்றை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல தமிழக பாஜ சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண், ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. ஆகவே தமிழக பாஜ கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியில் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும்.இவ்வாறு அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: