வடமாநிலங்களில் கடுமையாக உயர்ந்த பால் விலை: நாட்டிலேயே தமிழ்நாட்டில் பால் விலை குறைவு..!

சென்னை: நாட்டில் சென்னை பெங்களூரு உள்ளிட்ட தெற்கு மாநிலங்களை விட வடக்கு மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதத்தில் நாட்டில் பணவீக்கம் சற்று குறைந்த போதிலும் பால் மற்றும் பால் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏழரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் பால் விலை 7.7% வரை அதிகரித்துள்ளது. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐஸ்கிரீம் விலை 10.5% வரை உயர்ந்துள்ளது.

இதேபோல தயிர் விலை 7.6%ம் குழந்தைகளுக்கான பால் உணவின் விலை 8.8%ம் உயர்ந்துள்ளது. 2017ம் ஆண்டில் ஒரு லிட்டர் சராசரியாக 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 13 ரூபாய் வரை உயர்ந்து 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் இந்தியாவில் பால் விலையேற்றம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவேறாக இருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள். நடப்பு வார தொடக்கத்தில் டெல்லியில் கொழுப்பு சத்து நிறைந்த பாலின் விலை 61 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நவம்பர் மாத தொடக்கத்தில் ஆரஞ்சு நிற முழு கொழுப்பு சத்து நிறைந்த ஆவின் பாலின் விலை 1 லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல குஜராத்தில் செயல்பட்டு வரும் அமுல் நிறுவனத்தின் பால் விலையும் 2ரூபாய் உயர்த்தப்பட்டது. சராசரியாக அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளின் விலையும் ஒப்பிடும் போது இந்தியாவின் வடக்கு, மேற்கு, வடகிழக்கு நகரங்களில் பால் விலை உயர்வு அதிகமாக இருந்துள்ளது.

சென்னை, பெங்களூரு, எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களில் பால் விலை உயர்வு குறைவாகவே இருந்துள்ளது. கவுகாத்தியில் 2017ம் ஆண்டு லிட்டருக்கு 56 ரூபாயாக இருந்த பால் விலை தற்போது 56 ரூபாயாக உயர்ந்துள்ளது. அகமதாபாத்தில் 48 ரூபாயில் இருந்து 58 ரூபாயாகவும், அகர்தலாவில் 40 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், உயர்ந்துள்ளது. லக்னோவில் 52 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக 1 லிட்டர் பால் விலை உயர்ந்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களை பொறுத்தவரை சென்னையில் சராசரியாக 37 ரூபாயாக இருந்த பால் விலை கடந்த 5 ஆண்டுகளில் 3 ரூபாய் மட்டுமே உயர்ந்து நாட்டிலேயே குறைவாக 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 5 ஆண்டுகளில் சராசரியாக 2 ரூபாய் மட்டும் அதிகரித்து 47 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சராசரியாக 49% மக்கள் தினந்தோறும் பால் அல்லது தயிர் உள்ளிட்ட பால் பொருட்களை உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் விலையேற்றம் காரணமாக ஏழை குடும்பங்களில் பெண்கள் பால் பொருட்கள் உட்கொள்வதை குறைத்திருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related Stories: