வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (24.11.2022) வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். (25.11.2022 முதல் 28.11.2022) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: