திருப்பூரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு மாணவ-மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

திருப்பூர் :  திருப்பூரில் ரூ.38.81 கோடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாகமாக பார்வையிட்டனர். மேலும், அங்கு  வைக்கப்பட்டிருந்த செல்பி பாயின்ட் பகுதியில் செல்பியும் எடுத்து  மகிழ்ந்தனர். கல்லூரி மாணவி காயத்ரி: நீண்ட நாட்களாக பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. மேலும், இதன் வெளிப்புற தோற்றம் மிகவும் அழகாய் இருக்கிறது.

 இதுபோல் உள்ளே வரையப்பட்டுள்ள பின்னலாடை தொழில் தொடர்பான ஓவியங்களும் காண்பவர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. இதனால் பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று பஸ் நிலையம் திறக்கப்பட்டதும், தோழிகளுடன் வந்து உற்சாகமாக பார்வையிட்டேன். கல்லூரி மாணவி சங்கவி: தினமும் கல்லூரிக்கு பேருந்தில் பயணித்து வருகிறேன்.

பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் நடந்து வந்ததால், இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. பஸ் நிலையம் மிகவும் அழகாக உள்ளது. மேலும், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள், இருக்கை வசதிகள் போன்றவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவசங்கரி: பஸ் நிலைய கட்டுமான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதுபோல பஸ் நிலையம் மிகவும் பெரியதாக இருப்பதால், பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறவர்களுக்கு ஏதுவாக, எந்தெந்த பஸ் எந்த பகுதிகளில் இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாட்டு பணிகள் நடந்து வந்ததால் அந்த பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்போது இப்பிரச்னை ஏற்படாது.  

மும்தாஜ்: பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தும் வசதி என ஏராளமான சிறப்புகள் உள்ளன. சுரங்கப்பாதை உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பாக நடந்து பஸ் நிலையத்திற்கு வர முடிகிறது. மேலும், இருக்கைகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு கூட்டம் வந்தாலும், பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுவர் ஓவியங்கள் வெளிப்பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு திருப்பூரை குறித்து தெரியப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது.

Related Stories: