திருச்சானூர் கோயிலில் கார்த்திகை பிரமோற்சவம் 2ம் நாள் பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா-திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்பதி :  திருச்சானூர் கோயிலில் கார்த்திகை பிரமோற்சவத்தின் 2ம் நாளில் 7 தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதி அடுத்த திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்றுமுன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதை தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் பத்மாவதி தாயார் பெரிய சேஷ, சின்ன சேஷ, கஜ, கருட, முத்துப்பந்தல், கற்பக விருட்சம், தங்க ரதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி வந்தார்.

இந்நிலையில், பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளில் திரளான பக்தர்கள் திரண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில், பல்வேறு கலைஞர்கள் மேளம் வாசித்தபடியும், கோலாட்டம் ஆடியபடியும் வந்தனர். இரவு அன்ன வாகனத்தில் பத்மாவதி தாயார் நான்கு மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் தேவஸ்தான இணை செயலதிகாரி வீரபிரம்மன், துணை செயலதிகாரி லோகநாதம், ஏஇஓ பிரபாகர் ரெட்டி உ்ள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை முத்துபந்தல் வாகனம் மற்றும் இரவு சிம்ம வாகனத்திலும் பத்மாவதி தாயார் பவனி வருகிறார்.

Related Stories: