‘ஓன் போர்டு'வாகனங்களை வாடகைக்கு விடுவதால் எட்டயபுரம் பகுதியில் வாடகை கார் தொழில் பாதிப்பு-வருமானமின்றி ஓட்டுநர்கள் தவிப்பு

எட்டயபுரம் : எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ‘ஓன் போர்டு வாகனங்களை வாடகைக்கு விடுவதால் வாடகை கார் தொழில் பாதிக்கப்பட்டு வருமானமின்றி சிரமப்படுவதாக ஓட்டுநர்கள் கவலை தெரிவித்தனர். எட்டயபுரத்தில் வாடகை கார், வேன், ஆட்டோ தொழிலை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் வாடகை கார்கள், 30க்கும் மேற்பட்டவை உள்ளது. தீபாவளி, தைப்பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், திருமணம் மற்றும் விசேஷ நாட்களிலும் வாடகை கார்களுக்கு நல்ல ஓட்டம் இருக்கும்.

 மேலும் சபரிமலை, திருச்செந்தூர் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்கள், மருத்துவமனை, விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் பொதுமக்கள் அன்றாடம் வாடகை கார்களை பயன்படுத்துகின்றனர். லட்சக்கணக்கான முதலீட்டில் காரை வாங்கினாலும் இன்சூரன்ஸ், சாலைவரி, நுழைவுவரி, ஆண்டுக்கு ஒரு முறை ஆர்டிஓ அலுவலகத்தில் தகுதிச்சான்று பெறுதல் என கட்டணங்களாக பல ஆயிரங்கள் செலவாகின்றன. இதுதவிர டயர், ஆயில் மாற்றம், டீசல் போடுதல், டிரைவர்களுக்கு ஊதியம் என பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக அனைத்து செலவுகளையும் கழித்துப் பார்த்தால், வாடகை கார் தொழிலில் லாபம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. சில மாதங்களில் கார் ஓட்டம் இல்லை என்றால், இஎம்ஐயில் வாகனம் வாங்கியவர்கள் நிதி நிறுவனத்திற்கு மாத தவணை கட்டவே பெரும் பாடுபடுகின்றனர். ஆனால் ‘ஓன் போர்டு கார் வைத்திருப்பவர்கள் பலரும் தங்களது வாகனங்களை வாடகைக்கு விடுவதால் எட்டயபுரத்தில் வாடகை கார் தொழிலை நம்பியுள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆரம்ப காலத்தில் வாடகை கார்களுக்கு தனி வர்ணம் இருந்தது. தற்போது வெள்ளை நிறத்திலேயே டூரிஸ்ட் கார்கள் இயங்குகின்றன. மக்களும் இதே வர்ணத்தில் கார்களை பயன்படுத்துவதால் எது வாடகை கார் என்பதே தெரியாமல் போய்விட்டது. எட்டயபுரம் படர்ந்தபுளி, கீழஈரால், எப்போதும்வென்றான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பலரும் வாடகைக்கு விடுவதால், எந்த வரியும் அரசுக்கு செலுத்தாமல் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாடகை கார் தொழில் ஓட்டமின்றி ஸ்டான்டிலேயே காத்துக் கிடக்கின்றனர். ‘ஓன் போர்டு கார் வைத்திருப்பவர்கள், தகுதிச்சான்று பெறத் தேவையில்லை. வெளிமாநிலங்களுக்கு சென்றால் நுழைவுவரி கட்ட வேண்டியதில்லை என்ப உள்ளிட்ட பல காரணங்களால் வாடகையை குறைத்துக் கொள்கின்றனர்.

இதனால் வாடகை கார் டிரைவர்கள், தொழிலின்றி பாதிக்கப்படுகின்றனர். குடும்பச்செலவு, குழந்தைகள் கல்விச் செலவு, வீட்டுவாடகை, வாகன பராமரிப்பு என பல்வேறு செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே வாடகை கார் தொழிலை பாதுகாக்கும் வகையில், விதிமுறைகளை மீறி வாடகைக்கு செல்லும் ‘ஓன் போர்டு கார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எட்டயபுரம் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைவர்கள் குருபூஜைக்கு செல்ல தடை

தலைவர்களின் குருபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகை வாகனங்களில் பொதுமக்கள் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சொந்த வாகனம் வைத்திருப்போர் வாடகைக்கு செல்கின்றனர். எனவே அரசு இதனையும் கருத்தில் கொண்டு குருபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ‘ஓன் போர்டு காரை வாடகைக்கு விடுவோரை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

எட்டயபுரம் சிஐடியு வாடகை கார் ஓட்டுநர் சங்க தலைவர் கண்ணன்  கூறியதாவது: ‘ஓன் போர்டு காரை வாடகைக்கு விடுவதால் வாடகை கார் வைத்திருக்கும் உரிமையாளர்கள், டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி ஆர்டிஓ  அலுவலத்தில் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனாலும் சரியான நடவடிக்கை இல்லை. எனவே தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு சொந்தகாரை வாடகைக்கு விடுபவர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கவுரவ பயணம்

வாடகை கார் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும், சொந்த பயன்பாட்டு கார் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும் உள்ளது. எனவே தூரத்தில் இருந்து வரும்போதே வாடகை காரா, சொந்த காரா என்பது தெரிந்து விடும். வாடகை காரில் செல்வதை கவுரவ குறைச்சலாக நினைக்கும் சிலர் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு செல்லும்போதும், திருப்பதி, திருச்செந்தூர், பழநி, சபரிமலை உள்ளிட்ட கோயில்களுக்கு செல்லும் போதும் வெள்ளை போர்டு கொண்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களையே வாடகைக்கு அமர்த்தி செல்கின்றனர்.

மேலும் திருப்பதி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது மாநில எல்லையில் நின்று செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நுழைவு வரியும் கட்ட வேண்டியதில்லை என்பதாலும் ‘ஓன் போர்டு வாகனங்களை பொதுமக்கள் விரும்புகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சொந்த கார் வைத்திருப்போர், நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர்.

Related Stories: