கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழக சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு..!

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் சிவன் கோயில்களில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி மூலவர், வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மண்டபத்தில் நந்தி பகவானுக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், தேன், இளநீர் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருவண்ணாமலை

கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பெருமாளுக்கு அருகம்புல், வில்வஇலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாமரம், ஆகிய பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீப ஆராதனையும் நடைபெற்றது.

தஞ்சை

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடும், சிவனுக்கு 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்கம் வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதேபோல்  பிரதோஷத்தை முன்னிட்டு 13 அடி உயரமுடைய நந்தி பெருமாளுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி, உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

திருநள்ளாறு

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத தேய்பிரை சோமவார பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் மாஞ்சாமிருதம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

Related Stories: