கால்வாய் பராமரிப்பு பணியில் ‘கை’ வைத்தனர் அதிமுக ஆட்சியில் ரூ.10 கோடி முறைகேடு: சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் புகார்

சிங்கம்புணரி:  சிங்கம்புணரியில் கடந்த அதிமுக ஆட்சியில் கால்வாய் பராமரிப்பு பணியில் ரூ.10 கோடி முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். பெரியாறு அணையில் 132 அடி தண்ணீர் தேக்கும்போது, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இருந்து பிரிவு வாய்க்கால் 5,6,7 ஆகியவற்றிற்கு வைகை அணையிலிருந்து ஆற்றுப்பகுதி வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 2016ல் அதிமுக ஆட்சியில் பிரிவு வாய்க்கால் 5, 6, 7 ஆகியவற்றை பராமரிப்பு பணிகள் செய்திட, சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரின் நிறுவனம் தான் டெண்டரை எடுத்தது. ஆனால் பணிகளை தொடங்கும் முன்பே பெரியாறு கால்வாயில் இருந்த சிமென்ட் சிலாப்களை பராமரிப்பு செய்யும் நிறுவனம் பெயர்த்து எடுத்தது.

மேலும் 9 மாதத்தில் முடிக்க வேண்டிய கால்வாய் பராமரிப்பு பணிகளை பெயரளவில், ஒரு சில இடங்களில் மட்டும் செய்து விட்டு நிறுத்தி விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் முழு பணிகளையும் முடித்து விட்டதாக கூறி, ரூ.10 கோடிக்கு நிறுவனம்  கணக்கு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. கால்வாய் இருந்த இடம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய் வரை வந்தும், கடைக்கோடி கிராமங்களுக்கு செல்லாததால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பராமரிப்பு பணியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் சங்க உறுப்பினர் முத்துராமன் கூறுகையில், ‘‘ஒரு கோடி அளவிற்கு கூட பணிகள் நடைபெறவில்லை. அப்போதைய பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிகள் குறித்து ஆய்வு செய்யாமல் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். மேலும் இந்த நிறுவனம் எடப்பாடியின் நெருங்கிய உறவினருடையது என்பதால் அவர்கள் வாய் திறக்காமல் இருந்தனர். முறையாக ஆய்வு செய்யாமல் கோட்டை விட்டதால், தண்ணீரின்றி விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: