கோவில்பட்டி வட்டாரத்தில் மான், பன்றிகள் அட்டகாசத்தால் பயிர்கள் சேதம்-விவசாயிகள் கவலை

கோவில்பட்டி : கோவில்பட்டி வட்டாரத்தில் மான், பன்றிகள் அட்டகாசத்தால் நிலக்கடலை, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் நிலக்கடலை, உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், மல்லி, வெங்காயம், மிளகாய் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழிக்கேற்ப முதற்கட்டமாக ஆடிப்பட்டத்தில் கோவில்பட்டி கோட்டம் முத்துலாபுரம் குறுவட்டம் அயன்ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, அயன்வடமலாபுரம், அயன்கரிசல்குளம் போன்ற கிராமங்களில் ஏக்கருக்கு 30 கிலோ வீதம் நிலக்கடலை விதைகளை விவசாயிகள் விதைத்தனர். இக்கடலை மகசூல் காலம் 100 நாட்கள் என்ற நிலையில் தற்போது அறுவடை நடந்து வருகிறது.

 ஆனால், பருவம் தவறி பெய்த மழையால் போதிய அளவு விளைச்சல் இல்லை. இவை தவிர முத்துலாபுரம் குறுவட்டத்தின் மைய பகுதியில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஆறு செல்வதால் ஆற்றுப்படுகையின் வடபுறம் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரத்தில் அதிக அளவில் வந்து செல்லும் மான் மற்றும் காட்டுப் பன்றிகள், நிலக்கடலை  பயிர்களை முழுமையாக சேதப்படுத்தி செல்கின்றன. நிலக்கடலை செடியின் வேரில் முண்டி கடலையை தின்று செல்கின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பறிக்க வேண்டிய கடலை இயற்கை இடர்பாடுகளால் உரிய நேரத்தில் பறிக்க முடியாமல் போனதால் மண்ணிற்குள் செடியில் விளைந்த கடலை பருப்பு வேரிலேயே முளைவிட்டது. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை.

மாசார்பட்டி, அயன்ராசாபட்டி, வடமலாபுரம், வெம்பூர், மேலக்கரந்தை, அயன் கரிசல்குளம் கிராமங்களில் மக்காச்சோளம் பயிர்கள் முழுவதுமாக சால் பிடித்த நிலையில் மான், பன்றிகள்  இவற்றை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. நிலங்கள் மற்றும் கண்மாய்களில் பதுங்கியுள்ள காட்டுப்பன்றிகளும், மான்களும் இரவில் இங்கு வந்து பயிர்களை அழித்துச் செல்கின்றன. இதனால் கவலையில் உள்ள விவசாயிகள், அட்டகாசம் செய்து வரும் காட்டுப்பன்றி, மான்களை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

நிலக்கடலைக்கும் பயிர் காப்பீடு

 பொதுவாக செடி மற்றும் பயிர்களின் மேல் பகுதியில் விளையக் கூடிய அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு வழிவகை செய்துள்ளது. இருப்பினும் நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய நிலக்கடலைக்கு மட்டும் ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அரசு வழிவகை செய்யவில்லை. எனவே, ராபி பருவத்தில் நிலக்கடலைக்கும் பயிர் காப்பீடு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: