மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி: திருவாரூர் அருகே பரபரப்பு

முத்துப்பேட்டை: மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை மணப்பெண்ணான சிறுமி தடுத்து நிறுத்திய சம்பவம் திருவாரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 30 வயதான வாலிபருக்கும், அவரது மாமா மகளான 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண நாளான நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. காலை 6.30 மணிக்கு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர்.

உறவினர்கள், நண்பர்களும் வந்து குவிந்ததால் மண்டபம் நிறைந்திருந்தது. திருமணத்தை நடத்தி வைப்பதற்காக புரோகிதர், மந்திரங்கள் ஓதி மணமகனிடம் தாலியை எடுத்து கொடுத்தார். மணமகனும், தாலியை மணமகள் கழுத்தில் கட்ட தயாரானார். அப்போது 17வயது சிறுமியான மணப்பெண் திடீரென்று கூச்சலிட்டு தாலி கட்டுவதை தடுத்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் அப்படியே திகைத்து நின்றார். மண்டபத்தில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மணமகள், தான் வைத்திருந்த செல்போன் மூலம் சைல்டு லைனை தொடர்பு கொண்டு சிறுமியான தனக்கு, தனது விருப்பம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் மீது புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக சைல்டுலைன் அலுவலர்கள், முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருமண மண்டபம் வந்த போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: