கம்போடியாவில் சித்ரவதை அனுபவித்த ராமநாதபுரம் வாலிபர் மீட்பு மாடல் அழகி போல நடிக்கணும் முடிந்தளவுக்கு பணம் கறக்கணும்: சமூகவலைத்தள மோசடி கும்பல் குறித்து பகீர் தகவல்

ராமநாதபுரம்: மாடல் அழகி போல் அமெரிக்கர்களிடம் பேசி பணம் பறிக்க சொன்னார்கள் என்று, கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட ராமநாதபுரம் வாலிபர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அருகே  பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன். மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்துள்ளார்.   டேட்டா என்ட்ரி வேலை வாங்கி தருவதாக கடந்த ஜூன் மாதம் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்ட இவர், சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி பரிதவித்தார். தன்னை மீட்கக் கோரி இமெயில் மூலம் புகார் அளித்தார். தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக, இந்திய தூதரகம் மூலம் மீட்கப்பட்ட நீதிராஜன்  சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

கம்போடியாவில் அனுபவித்த கொடுமைகள் குறித்து நீதிராஜன் கூறியதாவது: வெளிநாடு செல்ல  முதுகுளத்தூர் அருகே ஒரு வெளிநாட்டு ஏஜென்டை அணுகினேன். அவர் வேலை வாங்கி தருவதாக கூறியதால் ரூ.2.50 லட்சம்  கொடுத்தேன். சுற்றுலா விசாவில் கம்போடியா அழைத்துச் சென்ற அவர், டேட்டா என்ட்ரி வேலை என கூறி  ஒரு சீன நிறுவனத்திடம் 3 ஆயிரம் அமெரிக்க டாலர் ெபற்றுக்கொண்டு என்னை விற்றுவிட்டார். அந்நிறுவனம், மாடல் அழகி போல் புகைப்படங்கள் வைத்து  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எனக்கு கணக்கு துவக்கி  கொடுத்தனர். மாடல் அழகி போல நடித்து, இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் அமெரிக்க பயனாளர்களுக்கு பாலியல், காதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்ப வைத்தனர்.  

இதன் மூலம் ஈர்க்கப்பட்டு தொடர்பு கொள்ளும் அமெரிக்கர்களிடம் முடிந்த அளவுக்கு பணத்தை கறப்பார்கள். படத்தை பார்த்து மயங்கி, திருமணம் செய்து கொள்ள முன்வருவதாக கூறுபவர்களிடம், எதிர்கால வாழ்விற்கு  தேவையான பணத்தை நிதி நிறுவனத்தில்  முதலீடு செய்யுமாறு வற்புறுத்துவார்கள். அப்படிச் செய்ததும்    இன்ஸ்டாகிராம் கணக்கை உடனடியாக முடக்கி  விடுவர். இப்படிச் செய்ய நான் மறுப்பு தெரிவித்தபோது எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து  சித்ரவதை செய்தனர்.கம்போடியா வில் 1,500க்கும் மேற்பட்ட தமிழக வாலிபர்கள் சிக்கி  தவிக்கின்றனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: