சத்ரபதி வீர சிவாஜியுடன் ஒப்பீடு; மாணவர்களின் ‘ரோல் மாடல்’ அமைச்சர் நிதின் கட்கரியா? ஆளுநரின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

அவுரங்காபாத்: சத்ரபதி வீர சிவாஜியுடன் ஒப்பிட்டும், மாணவர்களின் ‘ரோல் மாடல்’ நிதின் கட்கரி என்று மகாராஷ்டிரா ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநர் கோஷ்யாரி, ஒன்றிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். தொடர் அவர் பேசுகையில், ‘நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது உங்களுக்குப் பிடித்த ஹீரோ, தலைவர் யார் என்று கேட்டால், நாங்கள் சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால்  நேரு, காந்தி போன்ற தலைவர்களின் பெயர்களை கூறுவோம். தற்போது உங்களின் ரோல்மாடல் யார் என்று எவராவது உங்களை (மாணவர்கள்) கேட்டால், அதற்காக நீங்கள் வெளியே சென்று ரோல்மாடலை தேடவேண்டாம். அவர்களை இங்கேயே (நிதின் கட்கரி) காணலாம்.  

சத்ரபதி வீரசிவாஜி கடந்தகால தலைமுறையை சேர்ந்தவர்; ஆனால் இன்றைய புதிய தலைமுறையில் அம்பேத்கர் முதல் நிதின் கட்கரி வரை பல தலைவர்கள் உள்ளனர்’ என்று பேசினார். இவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வீர சிவாஜியை குறைத்து மதிப்பிடும் வகையில் ஆளுநர் பேசியதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே இந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோஷ்யாரி, ‘மகாராஷ்டிராவில் வசிக்கும் குஜராத்திகளையும் ராஜஸ்தானியர்களையும் வெளியேற்றினால், உங்களிடம் (மகாராஷ்டிரா மக்கள்) பணம் இருக்காது. பொருளாதார நகரமான மும்பையே இருக்காது’ என்று பேசினார். இவரது பேச்சு அப்ேபாது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: