தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை: தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறுவதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி, வரும் 27ம் தேதி முதல் மதுரை வடக்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருப்பாலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தலையாரி, சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடையில் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதற்கான பட்டியலை பாகுபாடு, வேறுபாடு பார்க்காமல் தயாரிக்கப்பட இருக்கிறது. அதுபோல தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட இருக்கின்றனர். சென்ற 10 ஆண்டுகளாக போராட்டங்களை கடந்து வெற்றி பெற்று இருக்கிறோம்.

வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் பூத் கமிட்டியினர் சிறப்பாக செயல்பட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதுடன் திமுகவையும் கட்டி காத்து வருகிறார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 27ம் தேதி முதல் மதுரையில் வடக்கு, மாநகர், தெற்கு மாவட்டங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த 11 பேர் கொண்ட அணியாக 400 குழுக்களை தேர்வு செய்ய வேண்டும்இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ரோகிணி, வெங்கடேசன் எம்எல்ஏ, இளைஞர் அணி ஜிபி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், வக்கீல் கலாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: