காங்கிரசில் வெடித்தது கோஷ்டி மோதல்; கே.எஸ்.அழகிரி கூட்டத்தை புறக்கணித்த மூத்த தலைவர்கள்: ஒரு தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என காட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், ஒரு தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திரகா காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் இன்று நடைபெற இருந்த கருத்தரங்கு கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். அவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றக் கோரி பல்வேறு கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் டெல்லி தலைமைக்கு புகார்களை அனுப்பி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசில் மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாருக்கும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கும் இடையே மனகசப்பு நிலவி வந்தது. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில், இரண்டு வட்டார தலைவர்களை நியமனம் தொடர்பான மோதல் சத்தியமூர்த்திபவன் வரை தொடர்ந்தது. அந்த இரண்டு வட்டார தலைவர்களை மாற்ற ேகாரி ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்திபவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு அவர்களை மாற்ற கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக 15க்கும் மேற்பட்டோரை கே.எஸ்.அழகிரி அழைத்து சென்றார். கூட்டம் முடிந்ததும் ரூபி மனோகரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றவர்களிடம் கே.எஸ்.அழகிரி எதுவும் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கே.எஸ்.அழகிரியின் காரை முற்றுகையிட்டனர்.

 

இந்த நிலையில், கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட நெல்லை மாவட்ட காங்கிரசார் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த மோதலில் பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக, 62 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. வரும் 24ம்தேதி ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோரிடம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்த உள்ளது.

 

இந்த சூழ்நிலையில், கே.எஸ்.அழகிரியின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காரர்களை எப்படி வெளியில் இருந்து வந்த குண்டர்கள் தாக்கலாம் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மற்ற மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கே.எஸ்.அழகிரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த விவகாரம் தமிழக காங்கிரசில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

 

அதன் எதிரொலியாக, இன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 105வது பிறந்த நாளை தமிழக காங்கிரஸ் சார்பில் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மற்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

அதை தொடர்ந்து சத்தியமூர்த்திபவனில் நடைபெறும், ‘இந்தியாவின் வளர்ச்சியில் இந்திரா காந்தியின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் மூத்த தலைவர்கள் பேசுவதற்கான அழைப்பிதழும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கட்சிக்காரர்களை தாக்கிய விவகாரத்தில் கே.எஸ்.அழகிரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்ேகாவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கே.எஸ்.அழகிரியுடன் செல்வதை புறக்கணித்தனர்.அதாவது, இந்திராகாந்தி சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து சென்ற பின்பு இவர்கள் அனைவரும் ஒன்றாக சென்று மாலை அணிவித்தனர். அதேபோன்று, சத்தியமூர்த்திபவனில் நடந்த கருத்தரங்கை புறக்கணித்து சென்றது காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் செல்லும் நிகழ்ச்சியை புறக்கணித்து உண்மை தான். ஒரு கட்சியின் தலைவரே ரவுடிகளை ஏவி கட்சியினரை தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மேலும், அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மேடையில் நின்று கொண்டு கட்சிக்காரர்களை ஒருமையில் பேசியது கட்சியை நேசிக்கும் எங்களுக்கெல்லாம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இரண்டு வட்டார தலைவர்களை மாற்ற வேண்டும் என்று நெல்லை மாவட்ட காங்கிரசார் தலைவரை முற்றுகையிட்டு கேட்கின்றனர். அது அவர்களின் ஜனநாயக உரிமை. காரை மறிப்பது என்பது ஒன்றும் புதிதல்ல. அவர் அங்கே அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு சென்றிருந்தால் இந்த பிரச்னை இந்த அளவுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு தலைவரே குண்டர்களை ஏவி கட்சியினரை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம். எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றினால் என்ன ஆகும். அதை மாநில தலைவர் செய்துள்ளார்.

 

உறுப்பினர் சேர்க்கை அதிகம் சேர்த்தவர்களுக்கு வட்டார தலைவர் பதவியை வழங்குங்கள் என்று தான் கேட்டுள்ளனர். அவர்கள் ஆயுதங்கள் எதையும் எடுத்து வரவில்லை. அவர்களை 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை வைத்து தாக்கியுள்ளனர். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரது தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: