மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை : மருந்துகளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பசேகர் உள்ளிட்ட 4 உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 65 ESI மையங்களுக்கு தேவையான மருந்துகள் பற்றிய விவரத்தை குறித்து மதுரை மண்டல மருத்துவ அதிகாரி கல்யாணி என்பவர் ரூ.13 கோடி அளவிலான மருந்துகள் தேவை என பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், ரூ.13 கோடி மருந்துகளை அதற்குரிய விலையில் வாங்காமல் ரூ.40 கோடி அளவிற்கு தேவை என போலி ஆவணங்கள் தயாரித்து 4 மருத்துவத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பணிபுரிந்த முன்னாள் கிராமப்புற சுகாதார சேவை இயக்குனர் இன்பசேகர்,  மதுரை மண்டல மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், அமர்நாத் ஆகியோர் ரூ.13 கோடி ரூபாய்க்கு மருந்துகள் வாங்கி கொடுக்காமல் தனியார் மருத்துவ கம்பெனிகளிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக தேவையில்லாமல் அதிகளவில் மருந்துகளை வாங்கி மோசடி செய்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்கு உடந்தையாக இல்லாதா கல்யாணி என்பவரை பணியிடை மாற்றம் செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாணி என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அவரது பணியிடை மாற்றத்தை ரத்து செய்து, அவர் மீதான குற்றச்சாட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் விளைவாக 2017-2018-ல் மதுரை மண்டலத்துக்கு ரூ.13 கோடிக்கு மருந்துகளை வாங்கவதற்கு பதில் ரூ.40 கோடிக்கு மருந்துகள் வாங்க போலி ஆவணம் தயாரித்தது அம்பலமாகியது.

தேவைக்கு அதிகமாக 3 மடங்கு அதிகம் வாங்கப்பட்ட மருந்துகள் பயன்பாடு இல்லாமல் காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக அளவில் வாங்கப்பட்ட மருந்துகள் வீணானதால் அரசுக்கு ரூ.27.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மருந்துளை தேவைக்கு அதிகமாக வாங்கி காலாவதியாக்கி, அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு ஏற்படுத்திய முன்னாள் உயர் அதிகாரிகள் மீது ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: