புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு; கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து வாலிபர் பலி: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில்  கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பலியான வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை கார்ப்பரேஷன் காலனி பகுதியில் கழிவுநீர் அகற்றும் பம்பிங் ஸ்டேஷன் உள்ளது.  பம்பிங் ஸ்டேஷன் ஆபரேட்டராக வெற்றிவேல் (35)  பணியாற்றி வருகிறார்.  இவர், கடந்த 16ம்தேதி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் அளவை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது, பம்பிங் ஸ்டேஷனில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து 40வது வார்டு குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் பார்வையிட்டு, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  அதன்படி  இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ்  சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து வந்த  தீயணைப்பு வீரர்கள் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதனிடையே, கொருக்குப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்த கலாவதி  என்பவர், தனது தம்பியை காணவில்லை என காவல்நிலையத்தில்  புகார் செய்திருந்தார்.  அவரை அழைத்து அடையாளம் காட்டும்படி கூறியபோது தனது தம்பி விநாயகம் (33) என கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது,  போதையில் தள்ளாடி பம்பிங் ஸ்டேஷனில் விழுந்து இறந்தாரா? அல்லது மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: